Abstract:
இக் கட்டுரை நீட்ஷேயின் மெய்யியலின் சாராம்சமான அதிமானுட சிந்தனையினை
ஆராய்வதாகவுள்ளது. அதிலும் குறிப்பாக, மேலைத்தேய கருத்துக்களையும் இந்திய
சிந்தனை மரபில் உபநிடத சிந்தனைகளின் தனிச் சிறப்புக்களையும் விளங்கி நீட்ஷே
எவ்வாறு தன் அதிமானுடனை கட்டமைக்கின்றார் என்பதனை எடுத்துரைக்கின்றன.
உபநிடதச் சிந்தனைகளின் தனிச் சிறப்பு எவ்வாறு ஜேர்மனிய மெய்யியலாளரான
நீட்ஷேயினால் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது ஆய்வுப் பிரச்சினையாகும்.
நீட்ஷேயின் கிறிஸ்தவ சமயம் சார் எதிர்ப்பும் அக்காலத்து ஜரோப்பிய சூழ்நிலையுமே
ஆரம்பகால உபநிடத சிந்தனைகளில் ஆர்வத்தினைச் செலுத்த காரணமாயிற்று
என்பது ஆய்வின் கருதுகோளாகக் காணப்படுகின்றது. இவ் ஆய்விற்கான தரவுகள்
நீட்ஷேயின் மூல எழுத்துக்களையும், அவற்றின் மொழிபெயர்ப்புக்களையும்,
அவற்றினைத் தழுவி எழுதப்பட்ட நூல்களையும் அத்துடன், ஆரம்பகால உபநிடதம்
சார்ந்து எழுதப்பட்ட மூல நூல்களையும், அது சார்ந்த முன்னைய ஆய்வுகளையும்
பெரிதும் பயன்படுத்துகின்றது. ஆய்வானது ஒப்பாய்வு முறை, விளக்கமுறை ஆய்வு
மற்றும் விமர்சன முறை போன்ற ஆய்வு அணுகுமுறைகளின் அடிப்படையில்
மேற்கொள்ளப்படுகின்றது. நீட்ஷேயின் அதிமானுடத் தளமானது மேலைத்தேய
சிந்தனைகளுடன் ஆரம்பகால உபநிடதங்களின் கருத்துக்களையும் உள்வாங்கி
உருவாக்கப்படுகின்றது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் மேலைத்தேயப்
பின்னணியினை மட்டுமே பெரிதும் பின்பற்றியமையினால் மேலாதிக்கப்போக்கு
கொண்டதாகவும், அதி வல்லமையின் மறுவடிவமாகவே அதிமானுடக் கருத்தாக்கம்
கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இவ் ஆய்வில் அதிமானுடக் கருத்தாக்கம்
மேலாதிக்கப் போக்கிற்கு வழிவகுப்பதில்லை. மாறாக மனவலிமையும், ஆற்றலும்
மிகுந்த நிலையில் உருவான ஒன்றாகவே கட்டமைக்கப்படுகின்றது என்பதும்
கண்டறியப்பட்டுள்ளது.