Abstract:
கல்வி என்பது ஒரு தனிமனிதனில் ஆரம்பித்து சமூகத்தின்
பால் அதன் வெளியீட்டினைக் கொண்டு சேர்க்கும் ஒரு கருவியாகும். கல்வியின்
முக்கியத்துவம் அதிகம் பேசப்பட்டு வந்தாலும் அதனை பெற்றுக் கொள்வதில் பல
காரணிகள் தடையாகவுள்ளன. அதனடிப்படையில் கிண்ணியா கல்வி வலயத்தில்
அமைந்துள்ள பாடசாலையான திஃகிண்-அல் அக்ஸா தேசிய பாடசாலையில்
இடைநிலைப் பிரிவு மாணவர்களின் கல்வியில் வறுமை ஏற்படுத்தும் தாக்கங்களை
அடையாளப்படுத்துவதனை இவ்வாய்வு முதன்மை நோக்காகக் கொண்டுள்ளது.
பண்பு மற்றும் அளவுசார் முறையில் அமைந்த இவ்வாய்வானது முதலாம் மற்றும்
இரண்டாம் நிலைத் தரவுகளைக் கொண்டமைந்துள்ளது. முதலாம் நிலைத்
தரவுகளாக நேர்காணல்கள், கலந்துரையாடல்கள் மற்றும் அளவையியல்
வினாக்கொத்து என்பவற்றை உள்ளடக்கி அவை விபரிப்பு மற்றும் விளக்கப்
பகுப்பாய்வு முறையில் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆய்வின் பெறுபேறுகளை விளக்க
விரிதாள் துணை (MS Excel Sheet 2013) கொண்டு தரவுகள் பகுப்பாயப்பட்டு
அட்டவணைகளும் வரைபடங்களும் தயார்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் நிலைத்
தரவுகளாக ஆய்வுக் கட்டுரைகள், அறிக்கைகள், சஞ்சிகைகள், இணையத்தளத்
தகவல்கள் ஆகியன மிளாயப்பட்டு ஆய்வுக் கோட்பாட்டுக் கட்டமைப்பைப்
பெற்றுள்ளது. ஆய்வின் பிரதான கண்டறிதல்களாக: மாணவர்களின் கல்வி
நடவடிக்கைகளில் பெற்றோர் கவனம் செலுத்தாமை, தினசரி பாடசாலைக்கு
செல்வதில் மாணவர்கள் மத்தியில் விருப்பமின்மை, மேலதிக வகுப்புகளுக்கு
செல்வதில் சிக்கல்கள், மாணவர்கள் தொழிலுக்குச் செல்லுதலில் ஆர்வம் காட்டல், வளப்பற்றாக்குறை, பாடசாலை உபகரணங்கள் கொள்வனவு செய்வதில்
சிக்கல்கள், பாடசாலை வருகை குறைவும் பாடசாலை இடைவிலகல்களும், கல்வியில் பின்னடைவு போன்ற பிரச்சினைகளை கண்டுகொள்ள முடிகின்றது.
எனவே மாணவர்களின் கல்வியில் வறுமையானது எதிர்மறையான தாக்கத்தை
செலுத்தியுள்ளது என்பதை இவ்வாய்வு முடிவாகக் கொள்கிறது. குறித்த
பாடசாலையில் கல்வி பெறும் மாணவர்களின் பிரச்சினைகளை உரிய முறையில்
அணுகி அவர்களுக்கு உதவித் திட்டங்களை மேற்கொள்ளவும் மாணவர்களுக்கு
உண்டாகும் கல்வி சார்ந்த பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான
ஆலோசணைகள் மற்றும் பரிந்துரைகள் பற்றிய முன்மொழிவை தருவதாகவும்
எதிர்காலத்தில் இவ்விடயத்தில் ஆய்வு செய்பவர்களுக்கு இவ்வாய்வு
துணைபுரிவதாகவும் அமையும்