Abstract:
பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் இலங்கையில் பல
பிரதேசங்களில் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை
இரண்டாயிரத்திற்கும் அதிகமானவை. பெருங்கற்காலம் பற்றி தெளிவாக அறிந்து
கொள்ளக்கூடிய வரலாற்று மூலங்களாக முக்கியத்துவம் பெறுகின்றன. இலங்கையில்
கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களுள் ஒன்றாக அம்பாறை காணப்படுகின்றது.
பண்டைக்காலந்தொட்டு பாரம்பரிய பிரதேசங்களில் முதன்மையானதாக இது
திகழ்கின்றது. இலங்கையில் இந்து சமயத்தின் தொன்மையினை அறிந்து
கொள்வதற்கு இப்பிராந்தியத்தில் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்சான்றுகள் ஆதாரமாக
அமைகின்றன. இதுவரை பல ஆய்வுகள் இடம்பெற்று பல்வேறு தொல்பொருள்
கண்டுபிடிப்புக்கள் இப்பிராந்தியத்தில் நிகழ்ந்துள்ளன. பெருங்கற்கால பண்பாட்டுச்
சின்னங்கள் குறித்து இலங்கையின் பல பிரதேசங்களில் ஆய்வாளர்களால்
அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அவற்றினைப் பற்றிய அறிக்கைகளும்
அவர்களால் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். நவீன
யுகத்திற்கு முற்பட்ட சமூக வழமைகள் மற்றும் சமய நெறிகள் போன்றவற்றினை
அறிந்துகொள்வதற்கு புராதன பண்பாட்டுச் சின்னங்களினை நுட்பமாக ஆராய வேண்டும்.
இவற்றின் மூலமாக எழுத்து, சமயம், இசை, நடனம், சித்திரம் முதலிய துறைகளில்
ஏற்பட்ட வளர்ச்சிகளையும் அறிந்துகொள்ள முடிகின்றது. அந்தவகையில்
இம்மாவட்டமானது சமூகம் மற்றும் அதோடு தொடர்புடைய வழமைகள் குறித்த
நீண்டகால வரலாற்றுப் பின்னனியை கொண்டமைகிறது. அறிவுபூர்வமாக
சிந்திக்குமிடத்து புராதன பண்பாட்டுச் சின்னங்கள் பிரதிபலிக்கும் சமய நெறிகள்
எத்தகைய பின்னனியைக் கொண்டு வடிவமைக்கப்பட்டன என்பதே இவ்வாய்வின்
பிரச்சினையாக அமைகின்றது. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள
அம்பாறை மாவட்டமானது ஆய்வுப் பிரதேசமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தினில் கண்டெடுக்கப்பட்ட புராதன பண்பாட்டுச் சின்னங்களில்
வெளிப்படுகின்ற சமய நெறிகள் பற்றி எடுத்துரைப்பதே இவ்வாய்வின் பிரதான
நோக்கமாக அமைகின்றது. மேலும் அம்பாறை மாவட்டத்தினில் காணப்படுகின்ற புராதன
பண்பாட்டுச் சின்னங்களினை அடையாளம் காணல் இவ்வாய்வின் பிரதான நோக்கமாக
அமைகின்றது. துணைநோக்கங்களாக அவற்றில் வெளிப்படுத்தப்படும் அக்கால
மக்களின் வாழ்வியல் அம்சங்களை எடுத்துரைத்தல். அரசர்கள் சமயங்களின்
வளர்ச்சிக்கு வழங்கிய பங்களிப்பினை பற்றி அறிந்து கொள்ளல். வரலாற்று
மூலாதாரங்களில் புராதன பண்பாட்டுச் சின்னங்கள் பெறுகின்ற சிறப்பினை ஆய்வுப்
பிரதேச மக்களுக்கு புலப்படுத்துவதுடன் புராதன பண்பாட்டுச் சின்னங்கள்
பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தினை வலியுறுத்தல் போன்றன காணப்படுகின்றன.
கள ஆய்வு முறையியல் பயன்படுத்தப்பட்டு ஆய்வானது மேற்கொள்ளப்படுகின்றது.
மேலும் வரலாற்றியல் ஆய்வாகவும் விவரண ஆய்வாகவும் பண்புசார் ஆய்வாகவும்
அமைகின்றது. அம்பாறை மாவட்டத்தில் ஆய்வுகளின் போது கிடைக்கப்பெற்ற
புராதனகால பண்பாட்டுச் சின்னங்கள் குறித்து விபரிப்பதனால் விபரண ஆய்வு ரீதியிலும்
அங்கு முற்காலத்தில் நிலவிய சமயநிலை குறித்து வரலாற்றியல் ரீதியில்
விளக்குவதனால் வரலாற்றியல் ஆய்வாகவும் அப்பிரதேச மக்களது நடைமுறை
வழக்கங்கள் பற்றி எடுத்துரைப்பதனால் பண்புசார் முறைமையிலும்
மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்விற்குப் பயன்பட்ட மூலங்களாக முதலாம்நிலைத்
தரவுகளாக நேர்காணல், அவதானம் போன்றவற்றுடன் இரண்டாம் நிலைத்தரவுகளாக
இலங்கையில் தொல்பொருட் சின்னங்கள் தொடர்பாக வெளிவந்த நூல்கள்,
சஞ்சிகைகள், காணொளிகள் போன்றன பயன்படுத்தப் பட்டுள்ளன. அண்மைக்
காலத்திலேதான் புராதன பண்பாட்டுச் சின்னங்களை அடையாளம் காணும் பணிகள்
இடம்பெற்றுள்ளன. அதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தினில் கண்டெடுக்கப்பட்ட
புராதன பண்பாட்டுச் சின்னங்கள் ஊடாக அப்பிரதேசத்தினில் ஆதி காலத்தில் இந்து, பௌத்த சமய பண்பாட்டு மரபுகள் எங்ஙனம் சிறப்புற்று காணப்பட்டிருந்தன என்பதனை
ஆராய்வதாக இவ்வாய்வானது அமைகின்றது.