Abstract:
இறைவனால் அடியெடுத்துக் கொடுக்கப்பட்டு இயற்றப்பட்ட
நூலாகவே திருத்தொண்டர் புராணத்தினைக் குறிப்பிடலாம். இப்புராணம்
தோன்றுவதற்கு மூலமாக விளங்குவது சுந்தரர் பாடிய திருத்தொண்டர் தொகையும்,
நம்பியாண்டார் நம்பி பாடியத் திருத்தொண்டர் திருவந்தாதியுமே ஆகும். இத்தகு
சிறப்பு வாய்ந்த பெரிய புராணத்தில் எல்லாச் செல்வமும் இருந்தும் கொள்கையில்
உறுதியாக இருத்தல் என்பது அனைவருக்கும் உரிய செயல். ஆனால் எதுவும்
இல்லாத காலத்திலும் கொள்கையில் உறதியாக இருந்து தன்னுடைய பக்தி
திறத்தினை வெளிப்படுத்தியவர்கள் நாயன்மார்கள், அத்தகு சிறப்புடைய
நாயன்மார்களுள் ஒருவராக சிறுத்தொண்டர் நாயனாரும் திகழ்கின்றார். இவரைப்பற்றி
எடுத்துரைப்பதே சிறுத்தொண்டர் நாயனார் புராணம் ஆகும். இப்புராணத்தில்
விருந்தோம்பலின் மகத்துவமானது உன்னதமாக எடுத்துரைக்கப்படுகின்றது.
இந்தவகையில் தமிழரின் பண்பாட்டில் விருந்தோம்பல் தனியிடம் பெறுகின்றது.
இந்துக்களின் தலைசிறந்த பண்பாடுகளில் விருந்தோம்பலும் ஒன்றாகும்.
இந்துக்களின் வர்ணாச்சிரம தர்ம நெறியிலே கிருகஸ்த நிலையிருப்போரின் மிக
முக்கிய கடமையாக விருந்தோம்பல் சுட்டப்படுகின்றது. இல்லற நிலையிலே
பெண்கள் தமது இல்லத்துக்கு வருவோரை இன்முகத்துடன் வரவேற்று இனிய
அமுதினைப் படைத்ததை இந்து மூலங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடியும்.
இல்லறக் கடமைகளில் ஒன்றான திருமணம் நடைபெறும் நோக்கமே விருந்தோம்பல்
ஆகும். விருந்தோம்பும் பண்பு உடையவர்கள் வறுமையில் வாடினாலும் அவர்கள்
வாழ்வில் மேன்மையுடையவர்கள். ஊடல் தணிக்கும் வாயில்களுள் ஒன்று விருந்தினர்
வருகையாக விளங்குகின்றது. நம்மை நாடிவரும் விருந்தினரை இன்முகத்தோடு
வரவேற்று உணவு முதலியவற்றை வழங்கி மிக்க அன்போடும் ஆர்வத்தோடும்
அவர்களை உபசரிப்பது வாழ்க்கையில் தலைசிறந்த பண்பாகக் கருதப்படுகின்றது.
அந்தவகையில் புராணங்கள் பொதுவாக இறைவனது புகழைப் போற்றுவனவாக
அமைந்தன. ஆனால் சிறுதொண்டர் நாயனார் புராணத்தில் இறைவனைது
மேன்மைகளைப் போற்றுவதனை விடவும் விருந்தோம்பலுக்கே அதிக முக்கியத்துவம்
கொடுத்துள்ளயே ஆய்வின் பிரச்சினையாக அமைகின்றது. மேலும் சிறுதொண்டர்
நாயனார் புராணத்தில் வெளிப்படும் விருந்தோம்பல் பற்றிய சிந்தனைகளை
அடையாளம் காணல் ஆய்வின் பிரதான நோக்கமாக அமைகின்றது. அத்துடன்
விருந்தோம்பல் முக்கியத்துவத்தை வலியுறுத்தல், இல்லறத்தில் விருந்தோம்பலின்
பற்றிய எடுத்துரைத்தல், தற்கால வாழ்க்கையின் விருந்தோம்பல் பெற்றுள்ள
சிறப்பினை புலப்படுத்தல். முதலியன ஆய்வின் துணை நோக்கங்களாக
அமைகின்றன. பெரிய புராணத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களது வரலாறு பற்றி
கூறப்படுகின்றது. அவற்றுள் சிறுதொண்ட நாயனார் புராணமானது ஆய்வின்
எல்லையாகக் கொள்ளப்பட்டுள்ளது. சிறுதொண்டர் நாயனார் புராணத்தில்
விருந்தோம்பல் பற்றிய சிந்தனைகளே அதிகளவில் வலியுறுத்தப்பட்டுள்ளன எனும்
கருதுகோளை முன்வைத்து இவ்வாய்வானது நிகழ்த்தப்பட்டுள்ளது. அத்துடன்
பெரியபுராணம் குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்ட போதிலும சிறுதொண்டர்
நாயனார் புராணத்தில் விருந்தோம்பல் குறித்து தனியான ஆய்வு எலவில்லை என
இவ்வாய்வு இடைவெளியை பூர்த்தி செய்யும் வகையில் இவ்வாய்வானது
மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் முதலாம் நிலைத்தரவுகளையும் இரண்டாம்
நிலைத்தரவுகளையும் பயன்படுத்தி ஆய்விற்காக தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டன.
மேல் உலகம் அடைவதற்கான சிறந்த வழி விருந்தோம்பல் ஆகும். என்று
திருவள்ளுவர் கூறுகின்றார். ஒவ்வொருவரும் விருந்தினரை உபசரித்து பிறப்பின்
அர்த்தத்தையும் வரும் தலைமுறைக்கு விருந்தோம்பும் பண்பின் திறத்தை உணர்த்தி
வாழ்தல் இன்றியமையாத ஒன்றாகும். அந்தவகையில் சிறுதொண்டர் புராணம்
எடுத்துரைக்கும் விருந்தோம்பல் பற்றிய சிந்தனைகளை இவ்வாய்வானது
ஆராய்கின்றது.