Abstract:
தேயிலை பயிர்ச் செய்கையானது சர்வதேச முக்கியத்துவம்
வாய்ந்த ஒரு வணிகப் பயிராகவும், குறிப்பாக இலங்கையின் மொத்த உள்நாட்டு
உற்பத்தியின் பிரதான மூலாதாரமுமாக காணப்படுகின்றது. மேலும் இலங்கையானது
தேயிலை பயிர்ச்செய்கை மூலமே ஆண்டு ஒன்றிற்கு 1.3 பில்லியன் டொலருக்கும்
அதிகமான வருமானத்தை பெற்றுக் கொள்கின்றது. இவ்வாறு பல வழிகளிலும்
இலங்கையின் பொருளாதாரத்திற்கு துணை புரிந்த தேயிலை உற்பத்தியின்
முதுகெலும்புகளான தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் வாழ்வாதார
பிரச்சனைகளானது ஆரம்பகாலம் முதல் இன்றைய காலம் வரை மிகவும் மோசமான
நிலையிலேயே காணப்படுகின்றது. அந்த வகையில் பெருந்தோட்டங்களின்
அமைவிடங்களில் ஒன்றான பதுளை மாவட்டத்தின் தோட்டப்புறங்களில்
உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இன்மை, சுகாதார இடர்கள், குறைந்த கல்வி வசதி,
காணி உரிமை இன்மை, லயன் குடியிருப்புகள் போன்ற பல சமூக பொருளாதார
பிரச்சினைகள் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அந்த வகையில் இவ்வாய்வின் பிரதான நோக்கமாக பதுளை மாவட்டத்திற்கு
உட்பட்ட தோட்டப்புறங்களில் வாழும் தோட்டத்தொழிலாளர்கள் எதிர்நோக்கும்
வாழ்வாதாரச் சவால்களை அடையாளங்காணலும் துணை நோக்கங்களாக
தோட்டத்தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரச் சவால்கள் ஏற்படுவதற்கான
காரணங்களை அடையாளம் காணல், தோட்டத்தொழிலாளர்கள் எதிர்நோக்கும்
வாழ்வாதாரச் சவால்களை தீர்ப்பதற்கான வாய்ப்புக்களை இணங்காணுதல் மற்றும்
தீர்வுகள், பரிந்துரைகளை முன்வைத்தல் என்பன காணப்படுகின்றன. மேலும்
இவ்வாய்வுக்காக முதலாம் நிலை தரவுகளான கள ஆய்வு, நேர்முகம் காணல்,
நேரடி அவதானம், வினா கொத்து என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இங்கு
186 தோட்டப்புறங்கள் காணப்படுவதனால் ஆய்வின் நோக்கத்தை அடைந்து
கொள்ளும் முகமாக நோக்க மாதிரி எடுப்பு முறையின் அடிப்படையில் இவற்றில்
தெரிவு செய்யப்பட்ட தோட்டப்புறங்களை மையப்படுத்தியதாக 100 கட்டமைக்கப்பட்ட
வினா கொத்துக்கள் வழங்கப்பட்டு தரவுகள் பெறப்பட்டுள்ளன. மேலும் இரண்டாம்
நிலை தரவுகளான பிரதேச செயலக பிரிவின் அறிக்கைகள், சஞ்சிகைகள், மத்திய
வங்கி ஆண்டறிக்கைகள், ஆய்வு கட்டுரைகள், பத்திரிகைகள் என்பனவும்
பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வினை பகுப்பாய்வு செய்வதற்காக Ms Excel, Arc
Gis 10.8, SPSS போன்ற மென்பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ் ஆய்வின்
மூலம் பதுளை மாவட்ட பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற
வாழ்வாதார பிரச்சனைகளாக லயன் குடியிருப்புக்கள், உட்கட்டமைப்பு
விருத்தியின்மை, சுகாதார வசதிகள் இன்மை, பாதுகாப்பின்மை, சம்பளப்பிரச்சினை
போன்ற பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. எனவே இவ் ஆய்வின்
முடிவாக வாழ்வாதாரப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசு மற்றும் அரசு சார்பற்ற
நிறுவனங்களுடன் இணைந்து ஒவ்வொரு தொழிலாளரும் தமக்கான பிரச்சினைகளை
தீர்ப்பதற்காக தாமே முன்வருதலின் மூலமே சிறந்த உட்கட்டமைப்பு வசதியுடனும்
எழுச்சி மிகுந்ததும் மாற்றமடைந்து வரக்கூடியதுமான ஒரு மலையக சமூகத்தை
உருவாக்கக் கூடியதாக இருக்கும்.