Abstract:
நாயன்மார்களால் பாடப்பட்ட திருமுறைகளில் கூறப்படும் தலங்களே
திருமுறைத்தலங்களாகும். அந்தவகையில் திருமுறைகள் என்பது தெய்வத்தன்மை
பொருந்திய முறையாகத் தொகுக்கப்பட்ட பாடல் தொகுப்பாக அமைகின்றது. சங்க
மருவிய காலத்தில் களப்பிரர் ஆட்சியினில் அவைதிக நெறியின் வளர்ச்சியினால்
வைதிக நெறியானது செல்வாக்குக் குன்றிய நிலையில் காணப்பட்ட வேளையில்
வைதிக நெறியினை வளர்ச்சியடையச் செய்வதற்காகவும் துறவற தர்மத்திற்கு எதிரான
கருத்துக்களை முன்வைக்கவும் இல்லறத்தின் மேன்மையை வலியுறுத்தவும் இறைவனது
புகழினைப் போற்றிப் பாடுவதற்காகவும் பக்திப்பனுவல்களை நாயன்மார்களும்
ஆழ்வார்களும் தோற்றுவித்தனர். இவையே திருமுறைகளாக பிற்பட்ட காலத்தினில்
தொகுக்கப்பட்டது. நாயன்மார்களுள் குறிப்பிடத்தக்க சிறப்புடையவராக
மாணிக்கவாசகரும் திகழ்கின்றார். திருவாதவூரர் எனும் இயற்பெயர் கொண்ட
மாணிக்கவாசகரால் பாடப்பெற்றது திருவாசகமாகும். திருவாசகம் என்ற பெயர்
திருவுடைய சொற்களாலான அருள் நூல் எனப்பொருள்படும். சொல்லழகு, பொருள்
அழகு ஆகிய இரண்டும் திருவாசகத்தில் காணப்படுகிறது. பழம்பெரும் காலங்களில்
தலங்கள் பலவற்றிற்கு சென்று அங்குள்ள இறைவனை புகழ்ந்து பாடிய காலமானது
சிறப்புமிக்கது. திருத்தல மகிமையும் அங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனது
சிறப்புக்களையும் திருவாசகத்தில் காணலாம். திருவாசகத்தில் இறைவனது
சிறப்புக்களை வெளிப்படுத்துவதற்காக அவர் உறைகின்ற தலங்களின் மகிமையை
மிகையாக கூறுகின்றமை ஆய்வின் கருதுகோளாக அமைகின்றது. திருவாசகத்தில்
கூறப்பட்ட திருத்தலங்கள் தற்காலத்தில் எப்படியான வளர்ச்சி நிலையிலுள்ளன?
அத்துடன் அவ் ஆலயங்களின் சிறப்பு குறித்து மக்களின் எண்ணம் போன்றன
ஆய்வுப்பிரச்சினையாக உள்ளது. திருமுறைத்தலங்கள் பற்றி பல்வேறு ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்ட போதிலும் திருவாசகத்தில் தற்கால வளர்ச்சி நிலை குறித்த
எந்தவொரு தனியான ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. இதனை ஆய்வு
இடைவெளியாக கருதி இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் பிரதான
நோக்கமாக மாணிக்கவாசகரால் திருவாசகத்தில் சுட்டப்படுகின்ற திருத்தலங்களை
அடையாளப்படுத்தல். மேலும் துணை நோக்கங்களாக அவ் ஆலயங்களின் தற்கால
வளர்ச்சி நிலையினை எடுத்துரைத்தல், அத்துடன் திருத்தல சிறப்பு மற்றும்
மேன்மையை எவ்வாறு அவரது நூலில் வெளிப்படுத்துகிறார் என்பதனை
தெரியப்படுத்தல். இதன் மூலமாக தற்காலத்தில் தல வழிபாட்டை மக்களுக்கு
வலியுறுத்துவதாகவும் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்விற்காக முதலாம்
நிலைத்தரவுகள் மற்றும் இரணடாம் நிலைத்தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதலாம்
நிலைத்தரவாக மாணிக்கவாசகரால் எழுதப்பட்ட திருவாசகத்தின் மூலநூல்
காணப்படுகின்றது. இரண்டாம் நிலைத்தரவுகளாக திருவாசகம் மற்றும் திருத்தலங்கள்
தொடர்பாக வெளிவந்த சஞ்சிகைகள், கட்டுரைகள் ஏனைய நூல்கள், இணைய
செய்திகள் மற்றும் காணொளிகள் போன்றனவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பன்னிரு
திருமுறைகளில் மாணிக்கவாசகரால் எழுதப்பட்டு எட்டாம் திருமுறையாக அமைந்துள்ள
திருவாசகம் ஆய்வு எல்லையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்வானது பண்புசார்
ஆய்வாகவும் வரலாற்று ஆய்வாகவும் காணப்படுகிறது. பண்புசார் ஆய்வு
எனக்கொள்கையில் திருவாசகத்தில் காணப்படுகின்ற திருத்தலங்களையும் அவற்றின்
தற்கால வளர்ச்சி நிலை பற்றியும் ஆராய்கிறது. மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட
திருவாசகம் தோற்றம் பெற்ற காலப்பின்னணியில் திருத்தலங்கள் பற்றியும் அவற்றின்
வரலாறு குறித்தும் ஆராய்வதால் வரலாற்றியல் ஆய்வு முறையியல்
பயன்படுத்தப்பட்டுள்ளது. திருக்கோயில்களை வழிபடுவதன் மூலம் மக்கள்
அருட்செல்வம், பொருட்செல்வம் பெற்று பெரு வாழ்வு வாழ்கின்றனர். ஆலயங்கள்
மூலமாக கலை, கலாசார, பண்பாடுகள் வளர்க்கப்படுகின்றன. சமய நெறிகள், ஆன்மிக
சிந்தனைகள் மக்களுக்கு உணர்த்தப்பட்டு வளர்க்கப்படுகின்றன. அதனடிப்படையில் மாணிக்கவாசகரது திருவாசகம் வெளிப்படுத்தும் திருத்தலங்களும் தற்காலத்தில்
அவற்றின் வளர்ச்சி நிலைகள் குறித்து இவ்வாய்வானது ஆராய்கின்றது