Abstract:
இலங்கையின் வரலாற்றில் காலத்துக்குக் காலம் அரசியல்,
பொருளாதார, பண்பாட்டுச் செல்வாக்கை ஏற்படுத்திய வகையில் இந்திய நாட்டிற்குக்குக்
குறிப்பாகத் தமிழகத்திற்குப் பிரதான இடமுண்டு. அந்த உறவுகள் வரலாற்றுக்கு
முற்பட்ட காலத்திலிருந்து இற்றை வரை நீடித்திருப்பதை அவதானிக்கலாம். ஆயினும்
அந்தந்தக் காலகட்டங்களில் இருநாடுகளிலும் நிலவிய சூழ்நிலைகளுக்கேற்ப
செல்வாக்குகளின் நிலைகளில் மாற்றங்களும் நிகழ்ந்துள்ளதை வரலாற்றுச்
சான்றுகளின் துணைக்கொண்டு கண்டுகொள்ள முடிகின்றது. இப்பின்னணியில்
நோக்கும்போது 19ஆம் நூற்றாண்டில் இவ்விரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள்
பண்பாட்டு ரீதியில் கொண்டும் கொடுத்தும் இருந்ததெனலாம். இலங்கையில்
ஆறுமுகநாவலர் காலத்தில் சைவமறுமலர்ச்சியின் பின்புலத்தில் இயங்கிய அறிஞர்கள்,
அவர் மறைந்த பின்பும் தமிழ்நாட்டுடன் நெருங்கிய உறவினைப் பேணினர். இதனால்
இருபகுதிகளிலும் பண்பாட்டு இணைப்பு வலுவடைந்திருந்தது. அத்தகைய பண்பாட்டு
உறவுகளுக்கான பின்னணியைக் விளங்கிக் கொள்வதும் எத்தகைய பண்பாட்டு
உறவுகள் காணப்பட்டன என்பதைக் கண்டறிவதும் இவ்வாய்வின் நோக்கங்களாகும்.
வரலாற்று ஆய்வு அணுகுமுறை மற்றும் பண்பாட்டு ஆய்வு அணுகுமுறையைப் பின்பற்றி
இவ்வாய்வு முன்னெடுக்கப்படுகின்றது. மேலும் இவ்வாய்வின் முதன்மை ஆதாரங்களாக
அக்காலத்தில் வாழ்ந்த அறிஞர்களது இலக்கியங்கள், மற்றும் சமகாலப் பத்திரிகைகள்
பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் இரண்டாம் நிலைத் தரவுகளாக மலர்கள்,
நூற்றாண்டு சிறப்பிதழ்கள், நூல்கள் மற்றும் பத்திரிகைகள் இவ்வாய்வுக்குத்
துணைநின்றமை குறிப்பிடத்தக்கது. பிற உறவுகளை விடவும் பண்பாட்டு
அடிப்படையிலான உறவுகள் பலம் மிக்கவையாகும். அதிலும் 19ஆம் நூற்றாண்டின்
பிற்பகுதியில் இரு பிராந்தியங்களிலும் காணப்பட்ட உறவுகள் சைவ மற்றும்
மொழியுணர்வவைப் வலுப்படுத்த உதவியுள்ளன என்பதை மறக்கமுடியாது.
இவ்விணைப்பு தமிழக – வடஇலங்கை உறவில் முக்கியமான காலகட்டதைக் குறித்து
நின்றதெனலாம்.