Abstract:
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையின் வட
பகுதியில் உள்ள யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அமெரிக்க மிஷனரியினர்
தம் கடமையான சமயப் பரப்புப் பணியை மேற்கொண்டதுடன் மட்டும் நின்றுவிடாது
சமயத்திற்கும் அப்பால் யாழ்ப்பாண சமுதாயத்தில் கல்வி, மருத்துவம், அறிவியல்
போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிய வகையில் நவீன யாழ்ப்பாண
சமுதாய வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்றனர். இவற்றில் மருத்துவம் , கல்வி
ஆகியவற்றிற்கு ஆற்றிய பணிகள் ஓரளவிற்கு விரிவாக ஆராயப்பட்டுள்ள நிலையில்
யாழ்ப்பாண மக்களின் வானவியல் துறைக்கு ஆற்றிய பங்களிப்பு இதுவரையிலும்
ஆழமாக ஆராயப்படாத ஓர் நிலை காணப்படுகின்றது. ஐரோப்பாவில் ஏற்பட்ட
மறுமலர்ச்சியின் விளைவாக மேலைத்தேசத்தில் எழுச்சி கண்ட நவீன வானியல்
துறையின் கோட்பாடுகளை யாழ்ப்பாண மக்களுக்கு முதன்முதலில்
அறிமுகப்படுத்தியவர்களாக அமெரிக்க மிஷனரியின் விளங்கினர். இத்தகைய
நோக்கத்தை முன்னெடுத்துச் சென்ற அமெரிக்க மிஷனரியினர்களுள்
முதன்மையானவராக விளங்கியவர் டானியல் பூவர் என்ற அமெரிக்க அறிஞராவார்.
அந்த வகையில் இவ் ஆய்வின் நோக்கமானது டானியல் பூவர் யாழ்ப்பாண மக்களின்
வானவியல் அறிவினை வளர்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் எவை என்பதை
இனம் காண்பதாகவும் இவ் ஆய்வின் பெறுபேறுகளாக, டானியல் பூவர் மேற்கொண்ட
நடவடிக்கையில் அவருக்கு கிடைத்த வெற்றி எப்படிப்பட்டது என்பதனை
ஆராய்ந்தறிவதாகவும் டானியல் பூவரின் பணிகளால் யாழ்ப்பாண வானவியல் மரபில்
ஏற்பட்ட மாற்றம் எத்தகையது என்பதை கண்டறிவதாயும் அமைகின்றது.