Abstract:
இந்து சமயமரபில் பிரஸ்தான திரயம் என்று அழைக்கப்படும் முக்கிய
நூல்களில் ஒன்றாக பகவத்கீதை காணப்படுகிறது. இது தத்துவ நூலாக மட்டுமன்றி
ஒரு சிறந்த உளவியல் நூலாகவும் காணப்படுகிறது. குருஷேத்திரப்போர்களத்தில் தனது
எதிர்ப்படையில் தனது உளமதிப்பிற்கு மிக்க பெரியோர் யாவரும் நிற்பதைக் கண்ணுற்ற
அர்ச்சுனன் போர் செய்யாது மனச்சோர்வுற்று தேர்த்தட்டில் உட்கார்ந்தான். அப்பொழுது
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கொடுத்த உபதேசத்தால் உற்சாகத்துடன் எழுந்து
போர்செய்யத்தயாராகிறான். மக்கள் தமது அன்றாட வாழ்வில் பல்வேறு
உளப்பிரச்சினைகளை சந்திக்கின்றனர். அத்தகையோருக்கு பகவத்கீதை சிறந்த
ஆற்றுப்படுத்தல் நூலாகவும் உளப்போதனைகளை வழங்கும் நூலாகவும்
காணப்படுகிறது. நமது வாழ்வில் எத்தகைய துன்பம் நேர்ந்தாலும் நமது கடமைகளை
சிறப்பாகச்செய்ய வேண்டும். கடமையிலிருந்து தவறக்கூடாது. இன்பமோ துன்பமோ
வெற்றியோ தோல்வியோ எல்லாவற்றையும் சமமாக எடுத்துக் கொண்டு அறிவாளன்
தனது விருப்பத்திற்கு ஆக அல்லாவிட்டாலும் உலக நன்மைக்காவது ஆசை
அற்றவனாக தொழில் செய்யவேண்டும் என பகவத்கீதை பொது நலக்கருத்தோடு
வாழவேண்டிய அவசியம் பற்றிக்கூறுகிறது. செய்ய வேண்டிய காலத்தில் அவரவர்
தர்மத்திற்கேற்ப செய்யவேண்டிய கடமைகளை செய்தே ஆகவேண்டும் என்றும்
அதிலிருந்து தவற இயலாது என்றும் பகவத்கீதையில் கிருஷ்ணன் அறிவுரை கூறுகிறார்.
பகவத்கீதையில் காணப்படும் உளவளப்போதனைகளை வெளிக்கொணர்வதே ஆய்வின்
நோக்கமாகும். கீதை பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு எவ்வாறான
உளவளப்போதனைகளை வழங்குகிறது என்பதே ஆய்வுப்பிரச்சினையாகும். உளவியல்
தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு ஆன்மீக வாழ்வு சிறந்த வழிகாட்டலாக அமைகிறது
என்பதே ஆய்வின் கருதுகோளாகும்