Abstract:
இவ்வாய்வானது க.பொ.த (உ/த) விஞ்ஞானப்பிரிவு மாணவர்களின்
கற்றல் திறனில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள் தொடர்பான ஒரு பகுப்பாய்வாகும்.
இவ்வாய்வானது சம்மாந்துறை கல்வி வலயத்திலுள்ள சம்மாந்துறைக்கோட்டத்தில்
காணப்படும் மூன்று 1 AB பாடசாலைகளில் விஞ்ஞானப்பிரிவில் கற்கும் மாணவர்களை
அடிப்படையாக கொண்டது. பாடசாலையின் மாணவர்களின் எண்ணிக்கையானது
படையாக்கப்பட்ட எழுமாற்று மாதிரி (stratified random sample) மூலம்
தீர்மானிக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு பாடசாலையிலும் உள்ள க.பொ.த (உ/த)
விஞ்ஞான பிரிவு மாணவர்களின் மொத்த எண்ணிக்கைக்கமைய விகித அடிப்படையில்
முறையாக்கப்பட்ட எழுமாற்று மாதிரி (Systematic random sample) மூலம்
ஆய்வுக்கான மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இதன் அடிப்படையில் மாதிரியாக
110 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். இவ்வாய்வுக்காக கற்றல் திறனை அளவீடு
செய்வதற்கு Dennis.H. Congos (2011), Student Academic Resource Center,
University of Central Florida ஆல் உருவாக்கப்பட்ட கற்றல் திறன் வினாப்பட்டியல்
(Study Skills Inventory) ஆய்வாளரினால் பயன்படுத்தப்பட்டது. இது தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
பெறப்பட்ட தரவுகள் Excel மற்றும் SPSS மென்பொருளிகள் மூலம் பகுப்பாய்வு
செய்யப்பட்டு கருதுகோள்கள் வாய்ப்புப்பார்க்கப்பட்டன. இதன் போது
மாறிகளுக்கிடையிலான தொடர்பினைக்காட்டுவதற்கான ’‘t’ மற்றும் ‘F’ ’ பெறுமானங்கள்
கணிப்பிடப்பட்டு முடிவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டன. இவ்வாய்வானது பின்வரும்
முடிவுகளை பெற்றுக்கொள்ள உதவியது. மாணவர்களின் கற்றல் திறனுக்கும் அவர்கள்
கற்கும் பாடத்துறைக்குமிடையில் தொடர்பு காணப்படவில்லை. மேலும் மாணவர்களின்
கற்றல் திறனில் அவர்களின் தந்தையின் கல்வித்தகைமை செல்வாக்கு
செலுத்தவில்லையாயினும் தாயின் கல்வித்தகைமை செல்வாக்கு செலுத்துவதை
பகுப்பாய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றது. மாணவர்களின் பால் ரீதியான
வேறுபாட்டிற்கும் மாணவர்களின் கற்றல் திறனுக்குமிடையே பொருண்மிய வேறுபாடு
காணப்படுகின்றது. ஆண் மாணவர்களை விட பெண் மாணவர்கள் கற்றல் திறனில்
சிறப்பாக காணப்படுகின்றனர்.