Abstract:
இன்றைய உலகமயமாதல் யுகத்தில் மனித சமூகம் கல்வியில் பல்வேறு வகையிலும் முன்னேறியுள்ளது.
உலகியல் மாற்றங்களுக்கேற்ப ஆளுமைமிக்க மனித சமூகத்தை உருவாக்கும் பொறுப்பு
கல்வித்துறைக்கு உண்டு. அனைவருக்கும் கல்வி என்ற நிலை வலுப்பெற்றுள்ள இன்றைய
காலகட்டத்தில் விசேட தேவையுடைய மாணவர்களும் கல்வி கற்பதற்கென விசேட அலகுகளை
உள்ளடக்கிய பாடசாலைகள் உருவாக்கப்பட்டு கற்றல் கற்பித்தல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை
விசேட அம்சமாகும். என்றபோதிலும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கல்விச் செயற்பாடுகள்
முன்னேற்றகரமாக முறையில் இல்லாததையும் அவதானிக்கலாம். அதாவது விசேட தேவையுடைய
மாணவர்களுக்கு கல்வி வழங்க பாடசாலைகள் தயாராக உள்ள போதிலும் பெற்றோர்கள் இதற்காகத்
தயாராகுவது குறைவாகவே உள்ளது. இதனடிப்படையிலேயே விசேட தேவையுடைய மாணவர்களின்
கற்றல் மேம்பாட்டில் பெற்றோரின் வகிபங்கை அறிவதற்காக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின்
விசேட அலகுடைய பாடசாலைகள் நோக்க மாதிரியின் அடிப்படையில் ஆய்வுக்காக எடுத்துக்
கொள்ளப்பட்டதுடன் மாணவர்களின் 81 பொற்றோர்களும், 10 ஆசிரியர்களும், பாடசாலைகளை
நிர்வகிக்கும் 03 அதிபர்களும் நோக்க மாதிரியின் அடிப்படையிலும் இவ்வாய்வுக்காகத் தெரிவு
செய்யப்பட்டுள்ளனர். ஆய்வு முடிவுகளிலிருந்து, விசேட தேவையுடைய மாணவர்களின் கற்றல்
மேம்பாட்டில் பெற்றோரின் ஈடுபாடு குறைவதற்கான காரணங்களாக பெற்றோருக்கு விசேட தேவையுடைய
மாணவர்கள் பற்றிய போதிய தெளிவின்மை, பெற்றோரினுடைய பொருளாதார நெருக்கடி, பெற்றோரின்
எதிர் மனப்பாங்கு, குடும்பத்தில் விசேட தேவையுடைய வேறு மாணவர்கள் காணப்படுதல், போன்ற
காரணங்களால் இம்மாணவர்களின் கற்றலில் பெற்றோரின் வகிபாகம் குறைகிறது. இதற்கான தீர்வுகளாக
ஆசிரியர்கள் பெற்றோருக்கு தகுந்த வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், பாடசாலையில்
இம் மாணவர்கள் தொடர்பாக நடைபெறும் கூட்டங்களுக்கு பெற்றோரை பங்கு பெறச் செய்தல்,
ஆசிரியர்கள் மாணவர்களின் வீட்டிற்கு சென்று பெற்றோருடன் மாணவர்களின் கற்றல் மேம்பாடு
தொடர்பில் கூடிய கவனம் செலுத்தல் போன்ற விதப்புரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.