Abstract:
நூலகங்கள் என்பது ஒரு சமூகத்தின் அறிவின் அடையாளம். ஒரு நூலகத்தின் வளர்ச்சிக்கு
அச் சமூக மக்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தினை பொறுத்தே அச் சமூக மக்களது அறிவின்
தரம் மற்றும் அறிவுத் தேடலில் அவர்களுக்கு உள்ள ஆர்வமும் கணக்கிடப்படுகின்றது. இதனை
அடிப்படையாக கொண்டு கிராமப்புற மக்கள் நூலக மேம்பாட்டிற்கு எத்தகைய பங்களிப்பை
ஆற்றுகின்றனர்? நூலத்தை எந்தளவு பயன்படுத்துகின்றனர்? நூலக ஊழியர்கள் எந்தளவு தம்
பொறுப்புணர்ந்து செயற்படுகின்றனர்? மற்றும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தினது பங்கு
கிராம மட்ட நூலகங்களில் எவ்வாறு காணப்படுகிறது? என்பனவற்றை வாழைச்சேனை
பிரதேசத்திலுள்ள நூலகங்களை மையப்படுத்திய ஆய்வாக இது காணப்படுகிறது. மேலும் எம்
இளம் தலைமுறை சிறந்த கல்வியியலாளராக பல்வேறு துறைகளிலும் ஆற்றல் கொண்டவராக
தடம்பதிக்க வேண்டும் அதற்கு பாடசாலை, கிராம மட்ட நூலகங்களுடனான அவர்களது
தொடர்பை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டே இவ் ஆய்வு
மேற்கொள்ளப்பட்டுள்ளது. தரவு சேகரிக்கும்முறை தரவு பகுப்பாய்வு முறை என்பன
இவ்வாய்வின் முக்கிய அம்சங்களாகும். இவ்வாய்வுக்கு முதலாம் மற்றும் இரண்டாம்
நிலைத்தரகள் அடிப்படையில் தரவுகள் சேகரிக்கப்பட்டன. இதனுள் அளவுமற்றும் பண்பு ரீதியான
தரவுகள் உள்ளடக்கப்பட்டன. இவ்வாய்வை மேற்கொள்ள எழுமாறாக சுமார் 30
மாணவர்களுக்கு வினாக்கொத்துக்கள் வழங்கப்பட்டு தரவுகள் பெறப்பட்டன. அத்தோடு நூலக
ஊழியர்கள், பொதுமக்கள் போன்றோரிடம் பெறப்பட்ட நேர்காணல் மற்றும் அவதானிப்பு
முறைகள் மூலம் பண்பு ரீதியான தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டன. பெறப்பட்ட தரவுகளை
பகுப்பாய்வு செய்வதற்காக Microsoft Exce மென்பொருள் பயன்படுத்தப்பட்டள்ளது.
முதல் நிலைத்தரவுகள் வாழைச்சேனை பிரதேச நூலகத்தின் நேர்மறையான மற்றும் எதிர்
மறையான தாக்கங்களை அறிந்து கொள்ளும் வகையிலும், இரண்டாம் நிலைத்தரவுகள் ஒரு
சிறந்த நூலகத்தின் பங்கு என்ன? என்பதை அறிந்து கொள்ளும் வகையிலும் அமைந்துள்ளன.
இதில் வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள 3 பாடசாலை நூலகங்கள், 2 பொது நூலகங்கள், 1
சன சமூக வாசிப்பு மையம் என்பன ஆய்வு மாதிரிகளாக கொண்டு ஆய்வு செய்யப்பட்டன.
ஆய்வு முடிவில் இக் கிராமத்திலுள்ள நூலகங்கள் எதிர் நோக்கும் இடர்கள் அடையாளம்
காணப்பட்டு, அதற்கான மாற்று வழிகளும் முன்வைக்கப்பட்டன. மேலும் நூலகத்தின்
பெறுமதியை உணர்ந்த, அதற்கான தகுதியும் தரமும் வாய்ந்த ஊழியர்கள்
வேலைக்கமர்த்தப்படும் போது ஓர் சிறந்த ஆளுமையை உருவாக்க கூடிய, நவீன
முறையிலான சிறந்த தரத்துடன் கூடிய நூலகம் உருவாகும் என்ற கருத்தும்
முன்வைக்கப்பட்டுள்ளது.