Abstract:
வரலாற்று வரைவியல் என்பது ஏனையத் துறைகளைப் போலவே காலத்திற்குக் காலம்
இற்றைப்படுத்தல்களுக்குள்ளாகி வளர்ந்துவரும் ஒரு துறையாகும். அதனடிப்படையில்
வரலாற்றாய்வுகளும் மேம்படுத்தப்படும்போது குறித்த கடந்தகால நிகழ்வுகள்
வரலாறுகளாக குற்றம் நீங்கி நிலைத்திருக்க இயலுமாகும். அல்லாதபோது அவை
வழக்கொழிந்த கருத்துக்களாக மாறும். பண்டைக்கால இந்திய வரலாற்றில் அவ்வாறு
நிலைப்பெற்றுள்ள கருத்துவார்ப்புக்களை புதியகோணத்தில் இருந்து நோக்கி ஆய்வு
செய்தவராக பேரா.ரோமிலா தாப்பர் விளங்குகின்றார். அவரது ஆய்வுகளால் பெரும்
விமர்சனங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஆளாக நேர்ந்தபோதும் தனது ஆய்வு
முயற்சிகளை இடைவிடாது தொடர்ந்து, பண்டைக்கால இந்திய வரலாற்று
வரைவியலுக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத ;திய ஓர் ஆளுமையாக தாப்பரை அறிமுகம்
செய்வதையும் அவ்வாறு இந்திய வரலாற்று வரைவியலில் மீள் பரிசீலனை செய்ய
வேண்டும் கருத்துவார்ப்புக்களை அடையாளம் காண்பதையும் நோக்காகக்கொண்டு
இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பண்புசார் ஆய்வான இவ்வாய்வானது
பேரா.ரோமிலா தாப்பரது நூல்கள் உட்பட ஆய்வுத் தலைப்பு சார்ந்த வேறு நூல்கள்
மற்றும் அவர் பற்றிய விமர்சனக் கட்டுரைகளாகப் பத்திரிகைகளில் வெளியான
கட்டுரைகள், இணையத்தள தகவல்கள் போன்ற இரண்டாந்தர மூலாதாரங்களைப்
பயன்படுத்தி செய்யப்பட்டுள்ளது. பண்டைக்கால இந்திய வரலாற்றில் ஆதாரமற்ற
வகையில் வேருன்றிப் போயுள்ள கருத்துவார்ப்புக்களை பல்வேறு அச்சுறுத்தல்கள்,
எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் தனது வரலாற்றியல் ஆய்வுகளாலும் கருத்துக்களாலும்
புதிய நோக்கில் இந்திய வரலாற்றை முன்வைத்த ஆளுமையாக பேரா.ரோமிலா தாப்பர்
விளங்குகின்றார்.