dc.description.abstract |
இன்றைய நவீன மனிதன் அவனது அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்ய இலகுவான
வழிமுறைகளைப் பயன்படுத்தி வருகிறான். ஆரம்பகால மனிதன் தமது வீட்டு எரிபொருள்
தேவைக்காக விறகுகளையே பயன்படுத்தி வந்தான். எனினும் காலப்போக்கில் வீட்டு எரிபொருள்
தேவைக்காக எரிவாயு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அவ்வாறே அதன் பயன்பாடு அதிகரித்து
எரிவாயு இல்லாமல் வீட்டு எரிபொருள் தேவையை நிறைவு செய்ய முடியாது என்ற நிலைக்கு
மனிதன் தள்ளப்பட்டுள்ளான். எரிவாயுக்கான கேள்வி அதிகரித்த காரணத்தினால் எரிவாயு
தட்டுப்பாடு பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிவாயு
தட்டுப்பாட்டினால் மக்கள் எவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்
என்பதைக் கண்டறிவதே இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்விற்காக எழுமாற்று மாதிரிகளாக
தெரிவு செய்யப்பட்ட கண்டி மாவட்ட கெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்த 167 குடும்பங்களுக்கு
வினாக்கொத்து வழங்கப்பட்டது. பூரணப்படுத்தப்பட்ட வினாக்கொத்து மூலமும் கலந்துரையாடல்,
அவதானம் மூலமும் முதலாம் நிலைத் தரவுகள் பெற்றுக் கொள்ளப்பட்டன. இரண்டாம் நிலைத்
தரவுகளாக ஆய்வுக் கட்டுரைகள், சஞ்சிகைகள், இணையக் கட்டுரைகள் என்பன மூலமாக
தகவல் சேகரிக்கப்பட்டு அத்தரவுகள் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டன. இவ்வாய்வின்
கண்டறிதல்களாக கெலிஓயா பிரதேசத்தில் அனேகமானோர் எரிவாயுவைப்
பயன்படுத்துவதாகவும் இதில் அதிகமானோர் எரிவாயு தட்டுப்பாட்டினால் பல்வேறு
பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளமையும் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அவற்றில்,
சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்ததால் அதனைக் கொள்வனவு செய்வதில் உள்ள
சிரமம், சமையல் எரிவாயுவின் கொள்ளளவு குறைக்கப்பட்டதால் அதன் பாவனைக் காலம்
குறைந்ததில் உருவான சிரமம், மக்கள் அன்றாடம் உணவுகள் சமைக்க முடியாது அவற்றினை
கடைகளிலும் ஹோட்டல்களிலும் பெற்றுக்கொண்டதால் இடர்பாடுகளை சந்தித்தமை,
ஆரோக்கியமான உணவைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டதால் நோய்வாய்ப்படல்,
கூட்டுக்குடும்பத்தில் வாழ்வோர், தினக்கூலி செய்வோர், சிறிய குழந்தைகளை
வைத்துக்கொண்டிருக்கும் தாய்மார்கள், உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்களில் பணியாற்றக்
கூடிய ஊழியர்கள் போன்றோர் இவற்றிலும் வேறுவிதமான பிரச்சினைகளுக்கும்
முகங்கொடுத்தல் போன்றன முக்கியமானவையாகும். இருப்பினும், எரிவாயு தட்டுப்பாட்டால் சில
மாற்று வழிகளைக் கையாண்டாலும் சமையலை உரிய நேரத்தில் நிறைவேற்ற முடியாமை,
புகையினால் ஏற்பட்ட ஒவ்வாமை மேலும், மின் அடுப்புப் பாவனையால் மின்கட்டணம்
அதிகரித்தல் போன்ற பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்துள்ளனர் என்பதையும் இவ்வாய்வின்
முடிவாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஆய்வின் பரிந்துரைகளாக இப்பிரச்சினையை தீர்க்க
அரசாங்கம் நடவடிக்கை எடுத்தல், மக்கள் இவ்வகையான அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ள தயார் ஆகுதல், எரிபொருள் பாவனையை குறைக்க மாற்று வழிகளை
பின்பற்றுதல் என்பன முன்வைக்கப்பட்டுள்ளன. |
en_US |