Abstract:
இலங்கைப் பொருளாதாரத்தில் பாரிய பங்காற்றி வரும் ஒரு துறையாக ஆடைக் கைத்தொழில்
துறையானது காணப்படுகின்றது. இலங்கையின ஏற்றுமதி வருமானத்தில் முக்கிய பங்களிப்பு செய்து
வரும் இத்துறையானது அதிகமானோருக்கு தொழில் வாய்ப்புகளையும் பெற்றுத்தருகின்றது.
அந்தவகையில் இத்துறையில் அதிகமான பெண்கள் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்கின்றனர்.
இவ்வாறு பொருளாதாரத்தின் முதுகெலும்பாக தொழிற்படும் இப்பெண் ஊழியர்கள் பல்வேறான
சவால்களுக்கு முகங்கொடுக்கின்றனர். எனவே இத்துறையில் வேலை செய்யும் பெண்கள் எதிர்
கொள்ளும் சவால்களை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொடுத்தல் அவசியமாகும். எனவே
இவ்வாய்வானது, தர்காநகர் பிரதேசத்தில் ஆடை உற்பத்தி தொழிலில் ஈடுபடும் பெண் தொழிலாளர்கள்
எதிர்கொள்ளும் சவால்களை கண்டறிதலினை பிரதான நோக்கமாக கொண்டு காணப்படுகின்றது. இந்த
நோக்கத்தினை அடைந்து கொள்வதற்காக ஆடை உற்பத்தி தொழிலில் ஈடுபடும் பெண் தொழிலாளர்கள்
எதிர்கொள்ளும் தொழில் ரீதியான, உடல் ரீதியான மற்றும் சமூக ரீதியான சவால்கள் போன்றவற்றை
அடையாளம் காண்பதனை துணை நோக்கங்களாக கொண்டு காணப்படுகின்றது. இவ்வாய்வுக்காக தர்கா
நகர் பிரதேசத்தில் நோக்க மாதிரி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட மூன்று தொழிற்சாலைகளில்
தொழில் புரியும் 241 பெண் ஊழியர்களில் யோமன் முறையை பயன்படுத்தி 150 பெண் தொழிலாளர்கள்
மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் எழுமாற்று மாதிரி அடிப்படையில் தெரிவு
செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவ்வாய்வுக்கான முதலாம் நிலை தரவுகள் கட்டமைக்கப்பட்ட
வினாக்கொத்தின் மூலமும் கலந்துரையாடல் மூலமும் பெறப்பட்டன. இத்தரவுகள் விவரண
புள்ளிவிபரவியல் மூலமாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தொழில் ரீதியான சவால்களில்
குறைந்த ஊதியம் மற்றும் தொழில் நிமித்தமான போக்குவரத்து பிரச்சினைகளை அதிகமானவர்கள்
எதிர்கொள்கின்றனர். உடல் ரீதியான சவால்களில் உடற் சோர்வினை அதிகமாக எடுத்துக் கூறிய
அதேவேளை நோய் வாய்ப்புகளுக்கு உள்ளாவதாகவும் குறித்த சிலர் எடுத்துரைத்துள்ளனர். அவற்றில்
அதிகமானோர் தலைவலி மற்றும் மூட்டுவலி போன்ற நோய்களை அடையாளப்படுத்தியுள்ளனர். மேலும்
சமூக ரீதியான சவால்களில் அதிகமான பெண்கள் தொழில் மற்றும் குடும்பத்தினை நடுநிலையாக பேண
முடியாமை மற்றும் குழந்தை பராமரிப்பு தொடர்பான சவால்களை எதிர்நோக்குவது
கண்டறியப்பட்டுள்ளது. எனவே அரசு மற்றும் ஊழிய நல சங்கங்கள் இவர்களது குறைந்தபட்ச
ஊதியத்தினை அதிகரித்தல், நிறுவனமானது போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளல், மாதாந்த
வைத்திய முகாம்களை ஒழுங்கமைத்தல், போதிய விடுமுறை அளிப்பு மற்றும் சிறந்த வேலைச் சூழலை
அமைத்துக் கொடுத்தல் போன்றவற்றின் மூலம் ஊழியர்கள் சிறப்பாக செயற்பட வழிவகுக்க முடியும் என
பரிந்துரைக்கப்படுகின்றது.