Abstract:
ஒரு நாட்டின் சமுதாயச் சூழல், அரசியல் பொருளாதாரச் சூழல், புலவர்களின் புலமைத்திறன், புலமை
வேட்கை, மக்களின் மனப்போக்கு, மக்களின் சுவையுணர்வு முதலிய பல்வேறு காரணிகளால்
காலந்தோறும் பல்வேறு இலக்கியங்கள் தோன்றி வளர்ந்து வருகின்றன. அவ்வாறு காணப்படும்
இலக்கியங்களை அவற்றின் பொருண்மை, யாப்பு, அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு
நிலைகளில் வகைப்படுத்துவர். இவற்றினை இலக்கிய வகைகள் என்பர். இவ்வகையில் தமிழ் மொழியிலும்
பல்வேறு இலக்கிய வகைகள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்றே பக்தி இலக்கிய வகை. பக்தி
இயக்கத்தின் விளைவாகத் தோன்றியதே பக்தி இலக்கியம். இறைவனின் பெருமைகளையும்
இறையனுபவங்களையும் கூறும் இலக்கியங்கள் அனைத்தும் பக்தி இலக்கியம் என்று அழைக்கப்படும்.
தமிழ் இலக்கிய உலகில் பன்னிரு திருமுறைகளையும் நாலாயிரத்திவ்ய பிரபந்தங்களையும் மட்டும் பக்தி
இலக்கியம் எனக் கூறும் மரபு உள்ளது. பக்தி இலக்கியங்கள் தமிழ் மொழிக்கு இலக்கணம் கூறுவதோடு
மட்டும் அமையாது தமிழர் தம் வாழ்க்கைக்கு இலக்கணம் கூறும் நூலாக தொல்காப்பியர் காலத்திலும்
அதற்கு முன்பும் கூட காணப்பட்டன எனக் கருத முடிகின்றது. இவை மூலம் மக்களிடையே வேதம்
ஓதுதல், வேதச் சடங்குகள் செய்தல், வேள்விகள் செய்தல் முதலிய வைதீக நெறிமுறைகள்
காணப்பட்டமை மற்றும் வைதீக சமயம் பற்றியும் அறிய முடிகின்றது. பக்தி இலக்கியங்களில்
காணப்படுகின்ற பாடல்களின் மூலம் எடுத்துரைக்கப்படுகின்ற மனிதனது வாழ்க்கையில்
மேற்கொள்ளப்படுகின்ற சடங்குமுறைகள் பற்றி விளக்குவதாக இவ்வாய்வு அமைகின்றது. பக்தி
இலக்கியங்கள் பெரும்பாலும் இறைவனது குணவியல்புகள், அவரது திருக்கோலம், அவரது அருட்திறம்,
உலகின் நிலையான பொருட்கள், உலகின் நிலையற்ற பொருட்கள், ஆலய வழிபாட்டின் சிறப்பு, ஆன்ம
ஈடேற்றம் போன்றவற்றினைப் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்த எழுந்த நூல்களாகும். இத்தகைய பக்தி
இலக்கியங்களில் சைவசமயம் தொடர்பான கோட்பாடுகளை விளகுகின்றனவற்றை திருமுறைகள்
எனச்சுட்டுவர். இத்திருமுறைகளில் ஒன்றாகவே பெரியபுராணம் காணப்படுகின்றது. சுந்தரர் பாடிய
திருத்தொண்டத் தொகையை முல்நூலாகவும், நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர்
திருவந்தாதியை வழிநூலாகவும் கொண்டு பெரிய புராணம் சேக்கிழாரால் படைக்கப்பட்டது.
இறைவனையும் இறையடியார்களையும் போற்றுகின்ற இப்பெரியபுராணத்தில் மனிதனது வாழ்வியல் சடங்கு
முறைகள் பற்றிப் பேசப்படுகின்றன என்பதே இவ்வாய்வின் பிரச்சினையாக அமைகின்றது. பக்தி
இலக்கியங்கள் குறித்துப் பல ஆய்வுகள் எழுந்த போதிலும் பெரியபுராணம் கூறுகின்ற வாழ்வியல் சடங்கு
முறைகள் பற்றி இதுவரை ஆராயப்படவில்லை எனும் ஆய்வு இடைவெளியை அடிப்படையாகக்கொண்டு
இவ்வாய்வானது மேற்கொள்ளப்படுகின்றது. பெரிய புராணத்தில் வெளிப்படுத்தப்படும் சிந்தனைகளை
அடையாளம் காண்பதோடு அவ்விலக்கியப் பாடல்களினூடாக அக்காலச்சூழலில ; சடங்குமுறைகள்
எவ்வகையில் நடைபெற்றன என்பதனையும் அவை பெற்றிருந்த முக்கியத்துவத்தினையும் ஆராய்வதே
இவ்வாய்வின் நோக்கங்களாக அமைகின்றன. இவ்வாய்வானது ஒரு பண்புசார் ஆய்வாக அமைகின்றது.
இவ்வாய்விற்கு தரவு சேகரிப்பு முறைகளாக இரண்டாம் நிலைத்தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சேக்கிழாரால் இயற்றப்பட்ட பெரியபுராணம் மற்றும் பக்தி இலக்கியங்கள் தொடர்பாக வெளிவந்த
கட்டுரைகள், சஞ்சிகைகள், ஏனைய நூல்கள் போன்றன பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இவ்வாய்வின்
மூலம் வாழ்வியல் சடங்கு முறைகளுக்கு நாயன்மார்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்
என்பதையும் அவர்களால் இயற்றப்பட்ட இலக்கியங்களில் அத்தகைய வாழ்வியல் சடங்கு முறைகள்
குறித்து பெரிதும் பேசப்பட்டுள்ளன என்பதையும் எம்மால் தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது.