Abstract:
தமிழில் புனைகதைகள் குறித்த சிந்தனையும் தேடலும் இடம்பெற்ற வண்ணமே உள்ளன. ஆங்கிலேயர்
ஆட்சி காரணமாக இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார, அரசியல் மாற்றங்கள் சமூக அமைப்பிலும்
மாற்றங்களை ஏற்படுத்தின. இம்மாற்றங்கள் இலக்கிய வளர்ச்சிக்கு பெரிதும் வித்திட்டன. மேலைநாட்டைப்
போலவே தமிழ் நாட்டிலும் முதலில் தோற்றம் பெற்றது நாவலாகும். அதன் பின்னரே சிறுகதைகள்
தோற்றம் பெற்றன. மேலைநாட்டு இலக்கியத் தாக்கத்தினால் தமிழில் அறிமுகமான சிறுகதையானது
வடிவம், அளவு, கருத்துச்செறிவு முதலான காரணங்களால் பெரும் செல்வாக்கைப் பெற்ற
கலைவடிவமாகத் திகழ்ந்தது. நீண்ட கதையோட்டம் இல்லாமல் ஒரு சிறு நிகழ்வை, மன உணர்வை,
மனிதப்பண்பை மையமாகக் கொண்டு படைக்கப்படும் சிறுகதைகள் மனித மனங்களை வெகுவாகக்
கவர்ந்தன. சிறுகதைக்கு மக்களிடம் ஏற்பட்ட செல்வாக்கு, எழுத்தாளர் பலரும் சிறுகதை படைப்பதற்கு
உந்துதலாக அமைந்தது. தமிழில் வ.வே.சு ஐயர் தொடங்கி வைத்த சிறுகதைப் பணியானது பலராலும்
தொடரப்பட்டது. எழுத்தின் ஆற்றல் மற்றும் கூர்மையை அணியாகக் கொண்டு படைக்கப்பட்ட
சிறுகதைகள் மக்களின் வாழ்க்கையை, வாழ்வியல் சூழல் மாற்றத்தை, மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்
ஊடகமாகச் செயற்பட்டன. சிந்தனையாளர்கள், இலக்கியவாதிகள் தம் கருத்துக்களை முன்னெடுத்துச்
செல்லும் கருவிகளாக சிறுகதையைப் பயன்படுத்தினர். இதன் காரணமாக சிறுகதைத் துறைக்குள் பல
எழுத்தாளர்கள் நுழைந்தனர். அவர்களுள் ஜெயகாந்தன் முக்கியமானவர். ஜெயகாந்தன் 1950களில்
சிறுகதை எழுதத் தொடங்கி, அறுபதாண்டு காலமாக தனது எழுத்தின் வலிமையால் பல பரிசுகளை
வென்றவர். ஜெயகாந்தனின் சிறுகதைகள் சமுதாய மாற்றத்தை நோக்கிய கலைப்படைப்புக்கள் என்ற
வகையில் சமூகத்தின் தாழ்ந்த பக்கங்களை, சமுதாய முரண்பாடுகளை,சமுதாயப் புறக்கணிப்புகளுக்கு
உள்ளானவர்களை வெளிக்கொணரும் படைப்பிலக்கியங்களாக அமைகின்றன. அந்தவகையில்,
ஜெயகாந்தனின் சிறுகதைகளில் சுயநலம் நிறைந்து, பொதுநலம் குறைந்து காணப்படும் இக்கால
சமுதாயம் கரும்புள்ளியாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. மனிதநேயம் குறைந்து வருவதையும் தனிமனிதன்
தாழ்ந்து போவதையும் இவரது சிறுகதைகள் சுட்டிக்காட்டுகின்றன. மனிதநேயத்தின் மாண்பினை
உயர்த்துவதில், ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சமூகப் பொறுப்புணர்வு வேண்டும் என்பதை
வலியுறுத்துவதில் ஜெயகாந்தனின் வகிபங்கு யாது? என்பதனை ஆய்வுப் பிரச்சினையாகக்
கொண்டு இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜெயகாந்தனின் சிறுகதைகள் வலியுறுத்தும்
தனிமனித ஒழுக்கம் மற்றும் மனிதாபிமான அம்சங்கள் யாவை? மேலும், இதனை வெளிப்படுத்துவதற்கு
ஜெயகாந்தன் கையாண்டுள்ள உத்திகள் மற்றும் அவரது படைப்பாக்கத்திறன் போன்றவற்றை
வெளிக்கொணரும் நோக்குடன் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வில் சமூகவியல்,
மானிடவியல், மொழியியல் அணுகுமுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்விற்கான தகவல்
சேகரிப்பு முறையாக இரண்டாம் நிலைத்தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில்,
படைப்பாளியின் சிறுகதைத் தொகுப்புகள், படைப்பாளி தொடர்பாக பத்திரிகைகள், சஞ்சிகைகளில்
வெளிவந்த ஆய்வுக் கட்டுரைகள், இணையப்பக்கங்கள் மற்றும் ஏனைய எழுத்தாளர்களின் விமர்சன
கட்டுரைகள் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை ஜெயகாந்தன் குறித்த ஆய்வுகளில் குறிப்பிட்ட
சில கதைக்கருக்களே பேசப்பட்டு வந்துள்ள நிலையில் அவரது சிறுகதைகளில் மனிதாபிமான
அம்சங்களின் வகிபாகம் குறித்த எவ்வித தனியான ஆய்வுகளும் வெளிவரவில்லை என்பதை
அடிப்படையாகக் கொண்டு சிறுகதைத்துறையில் பாரிய பங்காற்றிய ஜெயகாந்தனின் மனிதாபிமான
சிந்தனை குறித்து இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டமை சிறப்பம்சமாகும். சமுதாயத்தில் மக்களின்
வாழ்க்கை சிறக்க வேண்டுமெனில் மனிதநேயம் ஓர் அடிப்படை விடயம் என்றவகையில்
மனிதநேயத்திற்கு தனது சிறுகதைகளில் ஓர் முக்கிய இடம் கொடுத்துள்ளார் ஜெயகாந்தன்.