Abstract:
ஈழத்தில் நிகழ்ந்த போர்ச்சூழலுக்கு அஞ்சி ஏராளமான தமிழர்கள் 1970களை அடுத்து இந்தியாவிற்கும்,
ஏனைய ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளுக்கும் புலம்பெயர்ந்தனர். இவர்களில் புத்தி ஜீவிகளும்,
எழுத்தாளர்களும் அடங்குவர். அவர்கள் புலம்பெயர்தேசங்களில் இருந்துகொண்டு ஆக்க
இலக்கியங்களைப் படைத்தனர். அவ்விலக்கியங்களே புலம்பெயர் இலக்கியங்கள் எனப்படுகின்றன.
அவ்வாறான ஈழத்துப் புகலிடத் தமிழ் இலக்கியங்களை மையப்படுத்தி ஆய்வு முயற்சிகள் பல
தளங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாய்வுகள் பெரும்பாலும் புலம்பெயர் தமிழ்மக்களின்
வாழ்வியல் அனுபவங்கள், பண்பாட்டு நடைமுறைகள், சமுதாயச்சிக்கல்கள், அரசியல் - பொருளாதார
இடர்பாடுகள், தாயக நினைவுடன்கூடிய அகதிவாழ்வு, அனைத்துலக நோக்கு, புதிய சூழல்சார்
வெளிப்பாடுகள், பெண்களின் விழிப்புணர்வு மற்றும் விடுதலை. புலம்பெயர் தமிழிலக்கிய வளர்ச்சிநிலை
முதலிய கருப்பொருள்களைப் பிரதிபலிப்பவையாகவே காணப்படுகின்றன. இவ்வாய்வு முயற்சிகள்
வேறுபட்ட காலங்களை வரையறை செய்தும், வேறுபட்ட இலக்கியப்புலத்திலும், வேறுபட்ட நோக்கு
நிலையிலும், மேலோட்டமான பார்வையிலும் உதிரிக் கட்டுரைகளாகவும், விமர்சனக்குறிப்புக்களாகவும்,
ஆய்வுகளாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதேச ரீதியாக எவ்வித ஆய்வு முயற்சிகளும்
பூரணத்துவமிக்க ரீதியில் மேற்கொள்ளப்படவில்லை. போருக்குப் பின்னரான ஈழத்துப் புகலிடத்
தமிழிலக்கியங்களான கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை முதலியவற்றை ஒன்றிணைத்துத்
துல்லியமான, விரிவான எவ்வித சிறப்பாய்வு முயற்சிகளும் இற்றைவரை வெளிவரவில்லை. எனவே
ஈழத்துப் புகலிடத் தமிழிலக்கியம்சார் ஆய்வுகளில் கண்டுகொள்ளப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி
செய்யும் முகமாகப் புதிய நோக்கிலான, விமர்சனக் கோட்பாட்டு நிலைக்கமைவான ஆய்வு முயற்சிகள்,
ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நோக்கில், இற்றைவரை வெளிவந்த ஈழத்துப்
புலம்பெயர் தமிழிலக்கிய ஆய்வு முயற்சிகளைத் தொகுத்து, அடையாளப்படுத்தி, அவற்றினை
ஆய்வுக்குட்படுத்தி இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வுக்கு, ஈழத்துத் புகலிடத் தமிழிலக்கிய
ஆய்வு முயற்சிகளாக வெளிவந்த நூல்கள், கட்டுரைகள், ஆய்வேடுகள், சிறப்பிதழ்கள் முதலியவை
முதன்மைத்தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், பிதானமாக விமர்சனமுறை மற்றும் விவரணமுறை
(விளக்கமுறை ஆய்வு) முதலிய அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.