Abstract:
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தை ஆய்வுப் பிரதேசமாகக் கொண்டு அளவீட்டு ஆய்வாக இவ்வாய்வு
மேற்கொள்ளப்படுகிறது. விசேட தேவையுடைய மாணவர்கள் தமது இணைப்பாடவிதான செயற்பாடுகளில்
எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்காண்பதுடன் அவர்களது இணைப்பாடவிதான செயற்பாடுகளில்
பெற்றோரின் வகிபங்கினை ஆராய்தல் எனும் நோக்கத்தின் அடிப்படையில் இவ்வாய்வு
இடம்பெற்றுள்ளது. ஆய்வுப் பிரதேசமாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் தெரிவுசெய்யப்பட்டது.
இக்கல்வி வலயத்தில் விசேட தேவையுடைய மாணவர்களைக் கொண்ட 10 பாடசாலைகள்
மாதிரிகளாகத் தெரிவு செய்யப்பட்டன. இப் பத்து பாடசாலைகளிலிருந்து 10 அதிபர்கள் நோக்க
மாதிரியின் அடிப்படையிலும் , விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்பிக்கும் 20 ஆசிரியர்களும்,
விசேட தேவையுடைய 50 மாணவர்களும், இம்மாணவர்களின் பெற்றோர்கள் 50 பேரும் எளிய எழுமாற்று
மாதிரியின் அடிப்படையிலும் ஆய்வு மாதிரிகளாகத் தெரிவு செய்யப்பட்டு வினாக்கொத்து, அவதானம்,
நேர்காணல் எனும் ஆய்வுக் கருவிகள் பயன்படுத்தப்பட்டுத் தரவுகள் சேகரிக்கப்பட்டன, பெறப்பட்ட
தரவுகளை அடிப்படையாகக்கொண்டு ஆய்வு நோக்கங்களின் அடிப்படையில் பண்புரீதியாகவும்,
அளவுரீதியாகவும் பகுப்பாய்வு செய்யப்பட்டு ஆய்வின் முடிவுகளாக இம்மாணவர்களின்
இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பெற்றோரின் ஈடுபாடு குறைவாக இருப்பதற்கான காரணங்களாகப்
பெற்றோருக்கு விசேட தேவையுடைய பிள்ளைகளைக் கையாள்வது பற்றிய தெளிவின்மை,
பெற்றோரிடையே பொருளாதாரப் பிரச்சினை, பெற்றோரின் எதிர் மனப்பாங்கு, பெற்றோர் பிரிந்து வாழ்தல்,
குடும்பத்தில் வேறு விசேட தேவையுடைய பிள்ளைகளும் காணப்படுதல் போன்றன இனங்காணப்பட்டன,
இம்மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதற்குத் தீர்வுகளாக ஆசிரியர்கள் பெற்றோருக்கு தகுந்த
ஆலோசனைகள் வழங்குதல், பாடசாலையில் நடைபெறும் கூட்டங்களில் பெற்றோரை பங்குபெற
வைத்தல், ஆசிரியர்கள் மாணவர்களின் வீட்டிற்குச் சென்று பெற்றோருடன் மாணவர்களின்
இணைப்பாடவிதான செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுதல் போன்றன விதந்துரைக்கப்பட்டுள்ளன.