Abstract:
வகுப்பறை முகாமைத்துவம் மற்றும் வகுப்பறை ஒழுக்கம் என்பன தற்கால கற்றல் செயன்முறையின்
வெற்றியை உறுதிசெய்யும் சாதனங்களாக அமைகின்றன. அவற்றில் வகுப்பறை முகாமைத்துவம்
வகுப்பறைகளில் இடம்பெறும் கற்றல் - கற்பித்தலை மேலும் இலகுவாக்குகிறது. இங்கு கற்றல் -
கற்பித்தலைத் திட்டமிடல், கற்றல் வளங்களை ஒழுங்கமைத்தல், கற்றல் இடர்பாட்டினை எதிர்கொள்ளும்
மாணவர்களின் முன்னேற்றத்தினைக் கண்கானிப்பதன் மூலம் அவர்களின் திறன்களை அதிகரிக்கச்
செய்தல் ஆகிய செயற்பாடுகள் இடம்பெறுவதுடன் இவையனைத்தினதும் முக்கிய வகிபங்கு
ஆசிரியரையே சாருகின்றது. வகுப்பறையினை வினைத்திறனான வகையில் முகாமை செய்வதற்கு
ஆசிரியா்கள் மாணவர்களை முதன்மைப்படுத்தும் செயற்பாடுகளில் கூடிய கவனத்துடன் செயற்பட
வேண்டும். இதற்கு மேலதிகமாக முறையான தொடர்பாடல் முறைகளையும் ஆசிரியர் மாணவர்களுடன்
கையாள்கின்றனர். அந்த வகையில் இவ் ஆய்வின் நோக்கம் வகுப்பறை முகாமைத்துவம் தொடர்பாக
இடைநிலைவகுப்புக்களில் கற்பிக்கும் ஆசிரியர்களின் முகாமைத்துவத் திறன்களை கண்டறிவதுடன், அது
தொடர்பாக ஆசிரியர்களள் கொண்டுள்ள பலம் மற்றும் பலவீனங்களைக் கண்டறிவதாகவும்
அமைந்துள்ளது. இவ் ஆய்வில், ஆய்வு நோக்கத்திற்கமைய வகுப்பறை முகாமைத்துவத்துடன்
தொடர்புடைய 13 அம்சங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், ஒவ்வொரு அம்சம் தொடர்பாகவும்
வினாக்கொத்துக்கள் தயார் செய்யப்பட்டு ஆய்வுக் குடித்தொகைக்கு வழங்கப்பட்டு தரவுகள் பெறப்பட்டன.
இதன்படி எடுத்துக் கொள்ளப்பட்ட 10 அம்சங்களில் இடைநிலை வகுப்புக்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள்
சிறப்பான துலங்கலைக் காட்டியதுடன், 3 அம்சங்களில் சிறப்பான துலங்கலைக் காட்டாத தன்மையும்
கண்டறியப்பட்டது. இதன்படி ஆசிரியா்கள் வகுப்பறை முகாமையாளராக ஆற்றும் வகிபங்கு தெளிவாக
எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.