Abstract:
இலங்கை முஸ்லிம்களது நடைமுறையில் உள்ள முஸ்லிம் விவாக மற்றும்
விவாகரத்துச் சட்டம் தொடர்பில் அண்மைய காலங்களில் அதிகமான
அறிவுசார் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. அதன் கோட்பாடு,
நடைமுறை சார்ந்து எழுந்த பல்வேறு விதமான விமர்சனங்களின் காரணமாக
அதில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்துக்கள்
வலுப்பெற்றன. இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரால் சீர்திருத்த
முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டு அவர்களுக்கிடையிலான கருத்து
வேறுபாடுகள் காரணமாக சீர்திருத்தம் தொடர்பான முடிவு எட்டப்படவில்லை.
எனினும் இது தொடர்பான ஆய்வு முயற்சிகள் பல்வேறு கோணங்களில்
தொடர்கின்றன. இந்த அடிப்படையில் இஸ்லாமிய சட்டவாக்கத் துறையில்
கடந்த பல தசாப்த்தங்களாக அறிஞர்களது ஆய்வுக் கவனத்தை அதிகம்
பெற்றிருக்கின்ற துறையாக இஸ்லாமிய ஷரீஆவின் இலக்குகளை
மையப்படுத்திய அணுகுமுறை வளர்ந்து வருகின்றது. சட்டம் எது என்று
அறிந்து கொள்வது பாரம்பரிய பிக்ஹ் முறையாக இருக்க சட்டத்துக்கு
பின்னால் இருக்கின்ற காரணி என்ன, அதனால் அடையப்பெற வேண்டிய
இலக்கு என்ன என்பதில் கவனம் செலுத்துவதாகவே ஷரீஆவின் இலக்குகளை
மையப்படுத்திய அணுகுமுறை அமைகின்றது. இந்த அணுகுமுறையின்
முன்னோடியாக இமாம் ஷாதிபி திகழ்ந்த போதிலும் அதனை ஓர் முறையான
கலையாக முன்வைத்தவராகவும், புதிய ஆய்வுப் பரப்புகளுக்கு வழிகளை
திறந்துவிட்டவராகவும் இருபதாம் நூற்றாண்டின் இமாம் இப்னு ஆஷூர்
கருதப்படுகின்றார். இஸ்லாமிய சட்டவாக்கத்துறையில் புதிய இஜ்திஹாத்
முறையை ஷரீஆவின் இலக்குகளை மையமாகக் கொண்ட முறை
அறிமுகப்படுத்தியது. இந்தப் பின்னணியில் முஸ்லிம் விவாக மற்றும்
விவாகரத்துச் சட்டத்தின் கூறுகளில் பெண் காதி நியமனம், திருமண வயது,
விவாகப் பதிவு, வலி, பலதார மணம், தலாக் போன்ற பல்வேறு விடயங்களில்
சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் முயற்சியில் மாறுபட்ட கருத்துக்கள்
உள்ளன. இத்தகைய விடயங்களில் இஸ்லாமிய ஷரீஆவின் இலக்குகளை
மையப்படுத்திய இஜ்திஹாத் எவ்வகையில் தாக்கம் செலுத்துகின்றது என்பதை
இக்கட்டுரை ஆராய முனைகின்றது. குறிப்பாக ஷரீஆவின் இலக்குகளை
அடையப்பெறும் பொருட்டு ஆரம்பமாக ஒவ்வொன்றும் ஷரீஆவில் பெறுகின்ற
உரிய இடம் வரையறுக்கப்படுவதோடு, ஒவ்வொன்றிலும் தாக்கம் செலுத்தும்
ஷரீஆவின் கோட்பாடுகள், விதிகள் யாவை என்பது அறியப்பட வேண்டும்.
மேலும் நடைமுறையை அறியக்கூடியதாக துறைசார்ந்தவர்களைக் கொண்ட
கூட்டு இஜ்திஹாத் மூலமே இந்த விடயங்களுக்கான முறையான தீர்வை
பெறமுடியும் அதுவே சிறுபான்மை சமூகத்தின் நலன்களை பாதுகாக்கவும்
துணையாக இருக்கும் என்று இந்த ஆய்வு முன்மொழிகின்றது.