Abstract:
தமிழில் எழுந்துள்ள சிற்றிலக்கிய வடிவங்களுள் கோவை இலக்கியமும் ஒன்று. தமிழ் இலக்கண நூல்கள் கூறும் இலக்கண வரம்பிற்கு உட்பட்டு எழுந்த கோவை இலக்கியங்கள் பலவுண்டு. ஆயினும், அறக்கருத்துக்களை கோவைப்படுத்தி - நிரல்படுத்திக் கூறுதல் என்ற நிலையிலும் சங்கமருவிய காலத்தில் ஆசாரக் கோவை எனும் இலக்கியம் தோன்றியுள்ளமை நோக்கத்தக்கது. இங்கு கோவை என்பது காரணப்பெயராக அமைகிறது. அகப்பொருள் இலக்கணத் துறைகளை நிரல்பட கோவைப்படுத்துவதாகவும் ஆசாரங்களைக் வைப்படுத்துவதாகவும் இது அமைகிறது. எவ்வறாயினும், தமிழ் மரபில் கோவை எனும் பெயரில் இரு தளங்களில் சிற்றிலக்கிய வடிவம் நிலைபெற்றுள்ளது எனலாம். தமிழ் நாட்டிற்கு வந்து சேர்ந்த இஸ்லாம், தமிழ் இலக்கிய மரபுகளைப் பின்பற்றி இலக்கிய முயற்சிகளை முன்னெடுத்தது. ஆற்றுப்படை தொட்டு புராணம் வரையான பெரும்பாலான இலக்கிய வடிவங்களை உள்வாங்கி அது தமது இலக்கிய வெளிப்பாடுகளை முன்வைக்கலாயிற்று. அத்தோடு தமக்கே உரித்தான இலக்கிய வடிவங்களினூடும் இலக்கியச் செயற்பாடுகளை மேற்கொண்டன. இம்முனைப்புக்களில் ஒன்றாகவே தமிழ் மரபில் இரு தளங்களில் நிலைபெற்றிருந்த கோவை இலக்கிய மரபினை உள்வாங்கியமையினையும் அணுக வேண்டும். அவ்வகையில் இக்கட்டுரையானது கோவை இலக்கிய வடிவத்தின் இலக்கிய வரம்புகளை எடுத்துக்காட்டி, அம்மரபில் நின்று தோன்றிய கோவைப் பிரபந்தங்களை அடையாளப்படுத்துவதாகவும் ஆசாரங்களைக் கோவைப்படுத்தல் என்ற தளத்தைப் பின்பற்றி அப்துல்மஜீத் புலவரால் இயற்றப்பட்ட ஆசாரக்கோவை தொடர்பிலான பரந்த பார்வையை முன்வைப்பதாகவும் அமைகிறது.
ஆசாரங்களைக் கோவைப்படுத்தல் என்ற நிலையில் இஸ்லாமிய மரபில் மூன்று கோவைகள் தோன்றியுள்ளன. அதில் ஆசாரக்கோவை எடுத்தியம்பும் ஆசாரங்கள் யாரை முன்னிலைப்படுத்துகின்றன, அது எடுத்தியம்பும் ஆசாரம் முஸ்லிம் சமூகத்தினருக்கு மாத்திரமே பொருந்தக்கூடியனவா என்பன குறித்து ஆராய்தலே இவ்வாய்வின் பிரதான நோக்கங்களாகும். இந்நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இவ்வாய்வானது, பகுப்பாய்வு அணுகுமுறை, ஒப்பியல் அணுகுமுறை, விபரண அணுகுமுறை, வரலாற்று அணுகுமுறை ஆகிய ஆய்வு அணுகுமுறைகளைக் கைக்கொள்கிறது. இவ்வானது மு.க.அ. அப்துல் மஜீத் புலவர் இயற்றிய ஆசாரக்கோவையும் (1902), சங்கமருவிய காலத்தில் தோன்றிய ஆசாரக் கோவையும் (பெருவாயின் முள்ளியார் இயற்றியது) ஆய்வின் முதன்மை ஆதாரங்களாகக் கொள்கிறது.
மேற்குறித்த நோக்கத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வின்வழி பல்வேறு முடிவுகள் எட்டப்பட்டன. அவையாவன : இந்நூலில் சகல மக்களாலும் பின்பற்றக்கூடிய பொதுவான அறங்களே பெரிதும் வலியுறுத்தப்பட்டுள்ளன. அதேவேளை முஸ்லிம் சமூகத்தினருக்கே தனித்துமான பல அறங்களும் பல்வேறு இடங்களில் சுட்டப்பட்டுள்ளன. ஆலிமுக்கான அறங்கள் இந்நூலினுள் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு அந்நூல் எழுந்த காலச் சூழலே அடிப்படையாய் அமைந்துள்ளது, உடல்சார் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான அறங்கள் பல கட்டமைக்கப்பட்டுள்ளன. இது சங்கமருவிய கால அறநூல்களின் தாக்கத்தினால் ஏற்பட்டவை, இஸ்லாமிய மார்க்கக் கடமைகளை அறங்களாக வலியுறுத்துகின்றன.