Abstract:
தமிழ்மொழி இலக்கியப் பாரம்பரியமும் வரலாற்றுப் பாரம்பரியமும் கொண்டது. தமிழில் பல சமய
இலக்கியங்கள் தோன்றியுள்ளன. இவற்றுள் இஸ்லாமிய இலக்கிய வரலாறு ஆயிரக்கணக்கான பக்கங்களில்
எழுதத்தக்க தகுதிப்பாடு உடையது என்பதற்கு முகம்மது உவைஸ் அவர்களின் “இஸ்லாமிய இலக்கிய வரலாறு” தக்க சான்றாகின்றது. இஸ்லாமியக் கவிஞர்கள் தமிழை வளர்த்ததோடு தமிழ்மொழியை அழிவினின்றும் பாதுகாத்தவர்கள். தமிழ் மரபினை ஏற்றுக்கொண்டு இலக்கியங்களைப் படைத்ததோடு இஸ்லாமியருக்குரியதான புதியவகைச் சிற்றியலக்கியங்களையும் தமிழுக்கு அறிமுகம் செய்தனர். இஸ்லாமியக் காப்பிய வரிசையில் தோன்றிய ‘திருநபி காவியம்’ இந்தக் கட்டுரையில் ஆராயப்படவுள்ளது. இதன் ஆசிரியர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் ஆவார். திருநபி காவியம் இந்த ஆய்வின் மூலமாக அமைகின்றது.
விபரணமுறை, பகுப்பாய்வு முறை, ஒப்பீட்டு முறை ஆகிய அணுகுமுறைகள் ஆய்வில் மேற்கொள்ளப்படும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் பலரால் இலக்கியமாக்கப்பட்டுள்ளன. எனினும் வாழ்க்கை முழுவதையும் நிறைவாக உள்ளடக்கிய இலக்கியங்களாக அவை அமைந்திருக்கவில்லை. திருநபி காவியம் நபிகள் நாயகத்தின் (ஸல்) வாழ்க்கை வரலாற்றை முழுமையாகப் பாடியுள்ளதா என்பதை இனங்காண்பதே இந்த ஆய்வின் நோக்கம். தமிழ்க்காவிய மரபுகளை உள்வாங்கி அதே நேரம்
காலதேவைக்கேற்ப புதுமைகளையும் புகுத்திக் காவியம் படைக்கப்பட்டுள்ளமை ஆய்வில்
இனங்காணப்பட்டுள்ளது.