Abstract:
இன்றைய காலத்தில் மக்கள் பல்வேறுபட்ட இன, சமயச் சூழலில்வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்கல்விசார் துறையில் சமயங்களுக்கிடையே நிகழ்த்தப்படுகின்ற ஒப்பாய்வுகள் மக்களிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இலங்கையில் இஸ்லாமியசமயத்தையும், சித்தாந்த சைவத்தையும் பின்பற்றும் மக்கள் ஒருபிரதேசத்தில் வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளமையால் இச்சமயங்களுக்கிடையில் நிகழ்த்தப்படும் ஒப்பாய்வு முக்கியத்துவமுடையதாகின்றது. மத்திய கிழக்கில் தோன்றிய இஸ்லாம், இறைவன் ஒருவனே என்ற கொள்கையோடு “அல்லாஹ்’ இற்கு யாரையும் இணை வைப்பதை அனுமதிக்காத அதேவேளை இறைவன் உருவமற்றவர் எனவும் தெரிவிக்கின்றது. தென்னிந்தியாவில் தோன்றிய சைவசித்தாந்தம், முடிந்த முடிபு என்ற கருத்துடன் மெய்ப்பொருட்கொள்கையை உருவாக்கி, இறைவன் ஒருவனே எனத் தெரிவிக்கின்றது. இங்கு இறைவனுக்கு உருவம் இருப்பதாகக் கருதப்படுகின்றது. இவ்வாறு சில பிரதான விடயங்களில் ஒத்தும் வேறுபட்டும் செல்கின்ற இரு சமயங்களுக்கிடையிலான ஆராய்ச்சி மூலம் இரு சமயத்தவரிடையேயும் புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கம் ஏற்படும் என நம்பலாம்.