Abstract:
இலங்கையின் கிழக்கு மாகாணம் பல்லின மக்கள் இணைந்து வாழ்கின்ற ஒரு பிரதேசமாகும். பல்லின
சமூகம் உள்ள இடத்தில் ஏற்படக்கூடிய முரண்பாடுகளையும் சிக்கல்களையும் கடந்த கால வரலாறுகள் இங்கு பதிவு செய்துள்ளன என்பது மறுப்பதற்கில்லை. இருப்பினும் இம்முரண்பாடுகளுக்கு மத்தியில் அழகிய
இணக்கப்பாடான வரலாற்று நிகழ்வுகள் அதிகம் இடம் பெற்றுள்ளன. ஒரு சமூகத்தின் முக்கிய கூறு கல்வி. கல்வியை ஆதாரமாகக் கொண்டு வளரும் சமூகத்தின் பங்களிப்பு நாட்டிற்கு இன்றியமையாததொன்றாகும். கிழக்கு மாகாணத்தின் முக்கிய இரு சமூகங்களான முஸ்லிம் - தமிழ் அறிஞர்களின் புரிந்துணர்வும்
தங்களுக்கிடையிலான ஒத்துழைப்புக்களும் கடந்த காலங்களில் இடம் பெற்றுள்ளன. அறிவுப் புலமையை ஒருவருக்கொருவர் கொடுத்துதவி தங்கள் சமூகத்திற்கு அவர்கள் ஆற்றிய பணிகள் அளப்பரியன. ‘கற்றாரை கற்றோரே காமுறுவர்’ எனில் எம்மை விரும்பாதவர் உண்மையான கற்றவர் இல்லை என எண்ணி வாழ்ந்தவர்கள் இவர்கள். இவ்வாய்வு முக்கியமாக இரு பெரும் அறிஞர்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றது. சுவாமி விபுலாநந்தர், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ஆகியோரை முன்னிலைப்படுத்தி இவ்வாய்வு நகர்கின்றது. இவர்கள் முஸ்லிம் சமூகத்துடன் கொண்டிருந்த உறவுகளையும் அதன் மூலம் ஏற்படுத்தப்பட்ட சமூக நல்லிணக்கத்தையும் இவ்வாய்வு வெளிப்படுத்த முனைகின்றது.
இவர்களது உறவினர்களுடன் மேற்கொண்ட நேர்காணல், இவர்களால் எழுதப்பட்ட நூல்கள்,
இவ்வறிஞர்கள் பற்றி எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள் என்பன இவ்வாய்வின் மூலங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் இப்பெரும் இரு அறிஞர்களும் முஸ்லிம் சமூகத்துடன்
கொண்டிருந்த உறவுகள் அவர்களை முஸ்லிம் கல்விச் சமூகத்தில் இன்றும் பேசப்படும் அறிஞர்களாக நிலை நிறுத்தியுள்ளன. முஸ்லிம் கல்விமான்கள் இவர்களுடன் நல்லுறவை பேணி வந்துள்ளனர். இவ்வுறவுகள் பற்றிய ஆய்வுகள் பெரியளவில் வெளிப்படுத்தப்படாமையும் இத்தகைய நல்லுறவுகள் இன்றைய சமூகத்தில்
அடையாளப்படுத்தப்படாமையும் இவ்வாய்வின் பிரச்சினைகளாகும். இவர்களுக்கிடையிலான
நல்லுறவுகளை வெளிப்படுத்தும் போது இனநல்லுறவுகள் இருசமூகங்களிடமும் விருத்தி பெறுவதோடு முழுச்சமூகத்துக்கும் அவர்களின் காத்திரமான வகிபங்கு கிடைக்கப்பெறும் என்கின்ற நோக்கில் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது.