Abstract:
கடந்த ஐம்பது ஆண்டுகளில் தென்னிந்திய சினிமா ஒரு சக்தி வாய்ந்த சாதனமாக உலகம் முழுவதும் வளர்ச்சி பெற்றுள்ளது. மக்களுடைய மனப்பாங்கையும் கருத்துக்களையும் சினிமா மாற்றி அமைப்பதுடன் அது குறிப்பாக சிறார்களின் அறிவு, ஆளுமை, ஆன்மீகம், ஒழுக்கம், பண்பாடு போன்றவற்றில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. இதன் காரணமாகவே சினிமா என்னும் மாபெரும் சக்தியின் முன்பாக அவர்கள் செயலிழந்து நிற்கின்றார்கள். இவ்வகையில் எலமல்பொத பிரதேச முஸ்லிம்கள் பல்லின கலாசார சூழலில் வாழ்கின்றவர்களாக இருப்பதினால் இப்பிரதேச முஸ்லிம் சிறார்களிடையே தென்னிந்திய
சினிமாக்களின் தாக்கம் அதிகளவில் காணப்படுகின்றது. இலங்கையில் முஸ்லிம் சிறார்கள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பினும் தென்னிந்திய சினிமாக்கள் எலமல்பொத பிரதேச முஸ்லிம்
சிறார்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கங்களைக் கண்டறிவதற்கான முதல் முயற்சியாக இவ்வாய்வு
மேற்கொள்ளப்படுவதனாலும் முஸ்லிம் சிறார்கள் தென்னிந்திய சினிமாவினால் அடைந்துள்ள தாக்கங்கள் மற்றும் அதற்கு செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் என்பனவற்றை அடையாளப்படுத்துவதன் மூலமும் இவ்வாய்வானது முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. அத்துடன், இவ்வாய்வு தென்னிந்திய சினிமாக்கள் முஸ்லிம் சிறார்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களையும் அதன் மூலம் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களையும் கண்டறிதலை நோக்கமாகக் கொண்டுள்ளது. சமூகவியல், பண்புசார் ஆய்வான இதில் முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகள் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன. முதலாம் நிலைத்
தரவுகளாக ஆய்வுப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம் சிறார்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் போன்றோரிடம் பெறப்பட்ட நேர்காணல்கள், கலந்துரையாடல்கள் என்பன உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வுதொடர்பான நூல்கள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள் என்பன இரண்டாம் நிலைத் தரவுகளாகப்
பயன்படுத்தப்பட்டுள்ளன.