Abstract:
தேசத்தினைக் கட்டியெழுப்புதல் என்ற பதம் மேற்கு சமுகத்தில் அதிகம் செல்வாக்குப் பெற்றதாகும். எனினும்
அதன் இயல்பினைப் பொறுத்து அது மிகச் சிக்கலானதும் கஷ்டமானதுமான செயன்முறை.
அபிவிருத்தியினை எட்டிய பல நாடுகளில் அது நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னரே
சாத்தியமானது. இதன் அடிப்படை நோக்கம் மரபுரீதியான அடையாளங்களை அழித்துவிட்டு புதிய தேசிய
அடையாளத்தை உருவாக்குவதாகும். தென்னாசிய அரசுகள் போன்று பல்லின சமுகம் ஒன்றில்
தேசத்தினைக் கட்டியெழுப்புதல் என்பது வேறுபாடுகளுக்கிடையே ஒரு பொதுமைப்பாட்டினை உருவாக்கிக்
கொள்வதைக் குறித்து நிற்கின்றது. பொதுமைப்பாட்டுக்கு முரணாக வேறுபாடுகள் வெளிப்படும் போது
தேசத்தினைக் கட்டியெழுப்புதல் செயன்முறை குழப்பத்துக்குள்ளாகின்றது. அதேவேளை தேசத்தினைக்
கட்டியெழுப்புதல் அரசினைக் கட்டியெழுப்புவதனூடாகப் பெற்றுக் கொண்ட அதிகாரத்தினை தேசிய
அடையாளம் அல்லது தேசிய கலாசாரத்தினை உருவாக்குவதற்காகப் பயன்படுத்துவது என்ற அர்த்தத்திலும்
விளக்கப்படலாம். இச்செயன்முறையின் செயற்பாட்டுத் தன்மைமிக்க இருத்தலின் மூலம் மக்கள் மத்தியில்
ஒற்றுமை ஏற்படுவது மட்டுமல்லாமல், குறித்த மக்கள் தொகுதிக்கு புதிய அடையாளம்
தோற்றுவிக்கப்படுகின்றது. எனினும் வளர்முக நாடுகளைப் பொறுத்தவரையில் இச்செயன்முறை மிகுந்த
சிக்கலுக்குள்ளாகியுள்ளது. அதிலும் குறிப்பாக காலணித்துவச் செயற்பாடுகள் உள்ளடங்கலான இதர
காரணிகளின் தாக்கத்தினால் தென்னாசியாவில் தேசத்தினைக் கட்டியெழுப்புதல்
நெருக்கடிகளுக்குள்ளாகியுள்ளது. அந்நெருக்கடிகள் குறித்த பண்புசார் முறையிலமைந்த சிறு
பகுப்பாய்வொன்று இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.