Abstract:
இந்த ஆய்வானது, பெண்ணியாவினுடைய கவிதைகளை பெண்ணிலை நோக்கு அணுகுமுறையில் மதிப்பீடு
செய்வதாக அமைகின்றது. பெண்ணியா இலங்கையின் கிழக்கேயுள்ள மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இவர், பெண்ணியச் சித்தாந்தத்தின்மீது கொண்ட ஈடுபாட்டால் நஜீபா றூபி என்ற தனது பெயருக்குப் பதிலாக பெண்ணியா என்ற பெயருடன் கவிதையுலகில் எழுதிவருகின்றார். அவரது இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.
பெண்ணிலை நோக்கில் இலக்கியங்களை மதிப்பீடு செய்வது அண்மைக்கால தமிழ் விமர்சனப்போக்கில்
குறிப்பிடத்தக்கது. பெண்ணடக்குமுறைகள் பற்றிய பெண்ணியாவின் அடையாளப்படுத்தல்களை
அடையாளங்காணுதல், பெண்ணியாவின் கவிதைகளில் மேற்கிளம்பும் பெண் விடுதலைக் கருத்துக்களை நோக்குதல் ஆகிய இரண்டு குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு முன்னெடுக்கப்படுகின்றது. இதன் மூலம் பெண்ணியா தமிழ் கவிதையுலகில் பெறும் முக்கியத்துவத்தையும் உணர்த்த முடியும். விவரண ஆய்வு முறை. பகுப்பாய்வு முறை ஆகிய ஆய்வுமுறைகளைப் பயன்படுத்தி பெண்ணிலை நோக்கில் அவரது கவிதைகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. பெண்ணியாவின் கவிதைகளில் இடம்பெறும் விவரணங்களை நோக்கி அவற்றைத் தொகுத்துப் பகுத்தாய்ந்து வியாக்கியானம் செய்யப்படுகின்றது. எனவே, இந்த ஆய்வானது பெண்ணியாவின் கவிதைகளில் பேசப்படும் பெண் அடக்குமுறைகளையும் அவற்றிலிருந்து விடுபடுவதற்கான வேட்கையையும் பெண்ணிலை நோக்கில் மதிப்பிடுவதாக அமைகின்றது.