Abstract:
பொதுவாக 1950 களுக்கு முன் ஆண்களின் கல்விக்கு முன்னுரிமை கொடுத்தல், எழுத்தறிவு மட்டும்
பெண்களுக்குப் போதுமானது என்ற மனப்பான்மை போன்ற பல்வேறு காரணங்களினால்
பெண்களுடையை கல்வி பின்தள்ளப்பட்டிருந்தது. 1950 இற்குப் பிற்பட்ட காலங்களிலேயே முஸ்லிம் பெண்கள் கல்வியைப் பெறத் தொடங்கினர். இதனடிப்படையில் எலமல்பொத பிரதேசத்திலும் பெண்கல்வி வளரத்தொடங்கியது. 1965களுக்குப் பின்னர் பெண்கள் பாடசாலைக்குச் சென்று பரவலாகக் கல்வி கற்கத் தொடங்கினர். அந்தவகையில் இப்பிரதேச முஸ்லிம் பெண்களின் உயர்கல்வி வளர்ச்சியினை தற்போது நோக்கும் போது ஆண்களைவிட அதிகமாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாய்வு எலமல்பொத
பிரதேச முஸ்லிம் பெண்களின் உயர்கல்வி வளர்ச்சியை அறிந்து மதிப்பிடல், உயர் கல்வி வளர்ச்சிக்குத் தேவையான போதியளவு வளங்கள் காணப்படுகின்றனவா எனக் கண்டறிதல், உயர்கல்வியைத் தொடர்வதில் உள்ள சவால்கள், பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகளை முன்வைத்தல் போன்றவற்றை பிரதான நோக்கங்களாகக் கொண்டுள்ளது. இலங்கையில் முஸ்லிம் பெண்களின் உயர் கல்வியை மதிப்பிடுவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பினும் எலமல்பொத முஸ்லிம் பெண்களின் உயர்கல்வி வளர்ச்சியை மதிப்பிடுவதற்கான முதல் முயற்சியாக இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. சமூகவியல், பண்புசார் ஆய்வான இதில் முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதலாம் நிலைத்
தரவுகளாக: ஆய்வுப் பிரதேசத்திலுள்ள உயர்கல்வி பெற்ற, பெறுகின்ற முஸ்லிம் பெண்களிடம் பெறப்பட்ட நேர்காணல்கள், கலந்துரையாடல்கள், வினாக்கொத்து மூலம் பெறப்பட்ட தகவல்கள்
பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் நிலைத் தரவுகளாக ஆய்வு தொடர்பான நூல்கள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், அறிக்கைகள், பாடசாலைப் பதிவுத் திரட்டுப் புத்தகம் என்பன
பயன்படுத்தப்பட்டுள்ளன.