Abstract:
இலங்கை முஸ்லிம்களது திருமணத்தில் மஹரும் நன்கொடையும் பிரதானமான கூறுகள் என்பதற்கமைய கிழக்கிலங்கையின் கல்முனை முஸ்லிம்களது திருமணமும் மஹர், நன்கொடை ஆகிய அம்சங்களைக் கொண்டமைந்து காணப்படுகிறது. இஸ்லாமியத் திருமண நியமங்களுக்கேற்ப மஹர் திருமண ஒப்பந்தத்தின் பிரதான விடயங்களில் ஒன்றாகவும் உள்ளது. எனவே கல்முனை முஸ்லிம்களது திருமணத்தில் மஹர், நன்கொடை நடைமுறைகளை விபரித்தலையும் அந்நடைமுறைகளை இஸ்லாமிய நியமங்களோடு ஒப்பிடுதலையும் இவ்வாய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாய்வில் அளவு சார், பண்பு சார் ஆகிய இரு ஆய்வு முறைகளும் பிரயோகிக்கப்பட்டுள்ளன. நேர்காணல், வினாக்கொத்து, அவதானம், கலந்துரையாடல் ஆகிய வழிகளினூடாக பெறப்பட்ட தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டது. கல்முனை முஸ்லிம்களின் திருமணம் மஹரையும் ஒரு அடிப்படையாகக் கொண்டிருந்தபோதும் மஹரின் தொகை மிகப் பெரும்பாலும், ஜம்பதுநாயிரத்துக்கும் உட்பட்டதாக அமைந்துள்ளது. மஹர் பணமாக அன்றி தங்கமாகவும் செலுத்தப்படும். மஹர் தொகையை நிர்ணயிக்கும் உரிமை மணப்பெண்ணிடம் இல்லை. மஹரை செலுத்தும் மணமகன் பெண் வீட்டிலிருந்து நன்கொடையைப் பெற்று மஹர் செலுத்துகின்ற நிலையும் காணப்படுகின்றது. எனவே, கல்முனை முஸ்லிம்களது மஹர், நன்கொடை நடைமுறைகள் இஸ்லாத்தின் இலட்சியம், நியமங்களைக் கருத்திற் கொண்டு அமைந்துள்ளது எனக்கூறுவதில் ஏற்பு நிலை இல்லை என்பவை இவ்வாய்வின் பிரதான கண்டறிதல்களாகும்.