Abstract:
உலகநாடுகள் முகங்கொடுக்கும் முதன்மைச்சிக்கல்களுள் போரும் ஒன்று இது பல்வேறு முரண்பாடுகளை மையமாகக் கொண்டு தோற்றம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது அரசுகளுக்கு எதிரான மேற்கிளம்புகைப் போர்களின் பின் விளைவுகள் மிகவும் மோசமானவை. அவ்வாறான போர் நிகழ்களங்கள் போருக்குப் பின்னர் பாரிய அபிவிருத்தியை வேண்டிநிற்கின்றமை குறிப்பிடத்தக்கது. அபிவிருத்திப் பணியில் மொழியின் பங்களிப்பும் இன்றியமையாதது. ஒரு பிரதேசம் அபிவிருத்தியின் உச்சகட்டப் பயனை அடைவதற்கு மொழி ஒரு முதன்மை ஊடகமாகச் செயற்படுகிறது. எனவே குறிப்பிட்ட சமுதாயத்தை நிராகரித்து அப்பிரதேசத்தின் அபிவிருத்தியை தீர்மானிக்க முடியாது. உலகில் குறிப்பிடத்தக்க பல பிரதேசங்கள் போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்நாடுகள் சிலவற்றில் போருக்குப் பின்னரான அபிவிருத்தி குறிப்பிட்ட பிரதேசவாசிகளின் ஒத்துழைப்போடு இடம்பெற்றுள்ளன,இடம்பெற்றும் வருகின்றன. சில நாடுகளின் குறிப்பிட்ட பிரதேசவாசிகளின் ஒத்துழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ஆகையால் அவை அபிவிருத்தியில் பின்னிற்கின்றமையும் கவனத்திற்குரியது. இப்பின்னணியில் நின்று ஈழத்துச் சூழலில் போருக்குப் பின்னரான அபிவிருத்திக்கு தமிழ்மொழி ஆற்றக்கூடிய பங்களிப்பு மதிப்பிடப்பட்டுள்ளது.
“போருக்குப் பின்னரான அபிவிருத்திக்கு மொழியின் பங்களிப்பு இன்றியமையாதது” என்ற கருதுகோளை மையமாகக் கொண்டு ”ஈழத்துச் சூழலில் போருக்குப் பின்னரான அபிவிருத்திக்கு தமிழ்மொழி காத்திரமான பங்களிப்பினைச் செய்ய முடியும்” என்ற அடிப்படையிலேயே இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வுக்கு ஒப்பீட்டு முறையியல் பயன்படுத்தப்பட்டுள்ளது.ஈழத்தில் போருக்குப்பின்னரான அபிவிருத்திப்பணிகள் பிற நாடுகளின் அபிவிருத்திப் படிமுறைகளோடு ஒப்பிட்டு நோக்கப்பட்டுள்ளன. மொழிப் புறக்கணிப்பூடாக அபிவிருத்திப் பணிகளின் சாத்தியமின்மையும் மந்தகதியும் அவதானிக்கப்பட்டுள்ளன. மொழி ஒரு தொடர்பாடல் ஊடகம் பண்பாட்டுக்கருவி அபிவிருத்தி கூட்டுழைப்பின் விளைவாகப் பரிணமிப்பது. தொடர்பாடல் இல்லாத கூட்டுழைப்பும் பண்பாட்டைப் புறக்கணித்த அபிவிருத்தியும் தூர நோக்கிற் சாத்தியமற்றது. ஆகவே தெடா்பாடலை நிர்ணயிக்கும் பண்பாட்டைப் புலப்படுத்தும் மொழிக்கும் அபிவிருத்திக்குமிடையே நெருங்கிய தொடர்புண்டு. போருக்குப் பின்னர் பன்மொழிச்சூழல் கொண்வொரு பிரதேசத்தில் உள்நாட்டு நிறுவனங்களும் வெளிநாட்டு நிறுவனங்களும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியேற்படுகின்றது. உள்நாட்டு நிறுவனங்கள் பெரும்பான்பை மொழிபேசும் ஆளணியினரயே பெரும்பாலும் பணியிலீடுபடுத்தும் வாய்ப்புண்டு. பன்னாட்டு நிறுவனங்களும் குறைந்தபட்சம் ஆங்கிலமொழி ஆற்றலுடையோரையே பணியலீடுபடுத்த வாய்ப்புண்டு . எனவே குறிப்பிட்ட பிரதேசத்தில் வழக்கிலிக்கும் தாய்மொழியில் பரிச்சயமின்றி மேற்குறிப்பிட்ட அபிவிருத்திப் பணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் அப்பிரதேசத்தில் தமது தொடர்பாடலையோ கூட்டுழைப்பையோ மேற்கொள்வதென்பது மந்தகதியிலான அபிவிருத்திக்கும் வினைத்திறனற்ற முழுச்சாத்தியமற்ற அபிவருத்திக்குமே வழிவகுக்கும். அதன் சாத்தியப்பாட்டிற்கு மொழியின் பங்களிப்பு இன்றியமையாததாகும். அந்தவகையில் ஈழத்துச் சூழலிலும் போருக்குப் பின்னரான அபிவிருத்திக்கு தமிழ்மொழி காத்திரமான பங்களிப்பினைச் செய்ய முடியும்.