Abstract:
இலங்கை சுதந்திரம் அடைந்த்து முதலாகத் தோன்றி வளர்ந்த இனமுரண்பாடு உள்நாட்டு யுத்தமாகப் பரிணமித்து கால்நூற்றாண்டுக்கு மேலாகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்தியது. அந்த யுத்தகாலத்தில் இலங்கையின் வடக்கு கிழக்குப்பிராந்தியங்களின் கணிசமான பகுதி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது. அவ்வாறான நிலப்பகுதி காலத்துக்குக் காலம் விரிந்தும் சுருங்கியும் நகர்ந்தும் நிலைமாற்றங்கள் பலவற்றைக் கண்டு வந்தது. அண்மைக்காலத்தில் இலங்கை அரசபடையினர் புலிகள் இயக்கத்தினரைப் பெரும் யுத்தம் ஒன்றின் மூலம் வெற்றிகொண்டதோடு அப்பகுதி முழுவதும் இலங்கை அரசாங்கதின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மக்கள் இலங்கை இராணுவத்தின் கண்காணிப்புக்கு உட்பட்டவர்களாக அரச நிர்வாகத்தின் கீழ் வரலாயினர்.
அவர்களிற் பலர் மேற்படி யுத்தத்தால் தமது சொத்துக்களையும் உறவுகளையும் பிறவற்றையும் முற்றாகவோ அன்றேல் பகுதியளவிலோ இழந்தவர்களாக காணப்பட்டார்கள் யுத்தப்பிராந்தியத்துக்கு வெளியே உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்த அவர்களது இனத்தவர்களும் உள ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டார்கள் அத்தகைய மக்கள் எத்தகைய மனநிலையில் இருக்கிறார்கள் யுத்தம் பற்றிய அவாகளின் அபிப்பிராயம் யாது? யுத்தத்திற்கு முந்தியதும் பிந்தியதுமான தமது நிலைமைகள் குறித்து எத்தகைய அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒப்பீட்டளவில் எதிலே அதிகம் திருப்தி காண்கிறார்கள்? யுத்தத்துக்குப் பிந்திய தமது வாழ்கை நிலை தொடர்பாக எதை எதிர்பார்க்கின்றார்கள்? என்பன முதலான விடயங்கள் தொடர்பான அவாகளது மனநிலையை வெளிப்படுத்துவதில் யுத்தத்துக்கு பின்னர் தோன்றிய தமிழ் இலக்கியங்கள் பெருப்பாலும் மௌனமே சாதிக்கின்றன. ஆயினும் மிகச் சிறுபான்மையான படைப்புக்கள் அவை பற்றிப் பேசவே செய்கின்றன சில வெளிப்படையாகப் பேசுகின்றன சில நாசுக்காகப் பேசுகின்றன. அவற்றுக்கான காரணம் யாது? அப்படிப் பேசும் இலக்கியங்களைப் படைத்தவர்கள் யுத்தத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களா? அவர்கள் எங்கிருந்து பேசுகிறார்கள்? அவர்கள் அவ்வாறு பேசுவதன் மூலம் அடையமுற்படுவது யாது? என்பன போன்ற விடங்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமையும்.