Abstract:
இலங்கையில் மிக நீண்டகாலமாக புரையோடிப் போயிருந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் இனங்களுக்கிடையில் மனேபாவத்தில் பாரியளவிலான மாறுதல்கள் ஏற்பட்டுள்ளதனை அவதானிக்கமுடிகின்றது. யுத்த சூழ்நிலைகளில் இனங்களிடையே காணப்பட்ட அவநம்பிக்கை கசப்புணர்வுகள் நீங்கிய நிலையில் நாட்டின் எப்பகுதிக்கும் தங்குதடையின்றி சென்றுவரக் கூடியதாகவுள்ளதோடு மக்கள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்துவருகின்றனர். இத்தகைய பின்னணியில் கல்முனை மாநகரில் வாழ்ந்துவருகின்ற இனங்களின் உளநிலைகளில் எத்தகைய மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளன என்பதன் அடிப்படையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது.
கல்முனை மாநகரில் வாழ்ந்து வருகின்ற இனங்களின் உளநிலையில் எவ்வாறான மாறுதல்கள் ஏற்படுத்தியுள்ளன? அத்தகைய மாறுதல்கள் இனங்களுக்கிடையிலான உறவில் எத்தகைய முக்கியத்துவத்தைப் பெறுகின்றன? என்ற அடிப்படையில் ஆய்வுப்பிரச்சினை அடையாளப்படுத்தப்படுகின்றது.
இவ்வாய்வின் நோக்கம் யுத்ததிற்குப் பின்னரான சூழலில் கல்முனை மாநகரில் வாழ்கின்ற இனங்களின் மனோநிலை மாற்றங்கள் எவ்வாறு உள்ளது என்பதையும் அத்தகைய மாறுதல்கள் இனவுறவில் எத்தகைய முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது எனபதையும் அடையாளப்படுத்துவதுமாகும்.
இவ்வாய்வில் முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதலாம் நிலைத் தரவுகளாக நேர்காணல் வினாக் கொத்து போன்றவற்றினூடாக தகவல்கள் பெறப்பட்டுள்ளன. தவிர இரண்டாம் நிலைத் தரவுகளாக நூல்கள் மாநகர சபை அறிக்கை இணையத்தளச் செய்திகள் போன்றன பயன்படுத்தப்பட்டுள்ளன.
யுத்தத்திற்குப் பின்னரான சூழலில் இனப்புரிந்துணர்வு நம்பிக்கை போன்ற மனோநிலைகள் ஏற்பட்டுள்ளன. இருந்தும் இம்மக்களின் மனோநிலையில் மேலும் பல மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டியுள்ளது என்ற விடயமும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாய்வின் முடிவில் இந்நிலையினை வெற்றி கொள்வதற்கான சில சிபார்சுகளும் முன்மொழியப்படுகின்றது.