Abstract:
மட்டக்களப்பு மாவட்டத்தின் வடபுற எல்லைப்பிரதேசமான வாகரைப்பிரதேசம் பரந்த நிலப்பரப்பினைக்கொண்ட ஒருபிரதேசமாயினும் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் குடித்தொகை மிகவும் குறைவான பிரதேசமாகவும் அபிவிருத்தியில் பின்தங்கிய பிரதேசமாகவுமே மிக நீண்டகாலமாக இருந்து வருகின்றது. இப்பகுதியில் கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதில் ஏற்ப்பட்ட காலதாமதம் இப்பிரதேச மக்களின் சமூக கலாசார பொருளாதார அமசங்களிலும் பாரதூரமான தாக்கங்களை உண்டுபண்ணியுள்ளது. பாரம்பரிய கலாசார விழுமியங்களில் அதாவது மந்திரம் மற்றும் மாந்திரீகம் போன்ற நடவடிக்கைகளில் அதிகம் நம்பிக்கை கொண்ட மக்களாக இப் பகுதி மக்கள் காணப்படுகின்றனர்.
வாகரைப்பிரதேச மக்களின் வாழ்கை வரலாற்றினை அறிந்து கொள்வதன் மூலமே இம்மக்களின் வாழ்வாதார முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களை புரிந்து கெள்ளமுடியும். ஏனெனில் ஆய்வு நோக்கத்தின் அடிப்படையில் வாழ்வாதார மாற்றங்களை தெரிந்து கொள்வதற்கு ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியினை அடையாளப்படுத்தி நோக்கும் போது அந்த ஒரு குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே வாழ்வாதார முறைகளில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்றிருப்பதனை அறிய முடிகின்றது. 1983 காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் தாக்கம் வாகரைப்பிரதேசத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தியதில் இருந்து இப்பிரதேச மக்களின் வாழ்வாதார நிலைகளிலும் மாற்றங்கள் மற்றும் தாக்கங்கள் ஏற்படத்தொடங்கியது.
மூன்று தசாப்த கால யுத்தமும் சுனாமி உள்ளிட்ட இயற்கை அனர்தங்களும் இப்பிரதேச மக்களின் வாழ்கை நிலையில் ஏற்படுத்திய தாக்கங்களை மதிப்பிடுவதும் இடப்பெயர்வுகள் மூலம் இவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை இனம் காண்பதும் இக்கால கட்டத்தில் இப்பிரதேச மக்களின் வாழ்வாதார நிலையில் முன்னேற்றகரமான மாற்றத்தினை ஏற்படுத்துவதற்காக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் எந்தளவிற்கு வெற்றியளித்துள்ளன என்பதனை மதிப்பிடுவதும் . இவ் ஆய்வுக்கட்டுரையின் நோக்கமாகும். தெரிவு செய்யப்பட்ட ஐந்து கிராமங்களில் இருந்து எழுமாற்று மற்றும் அனுபவ அடிப்படையில் இனம் காணப்பட்ட 30 கிராமவாசிகளிடம் வினாக்கொத்துக்கள் மூலமும் கலந்துரையாடல் மூலமும் பெறப்பட்ட தகவல்கள் கருத்துக்கள் நேரடி அவதானிப்புக்கள் இவ்வாய்வினை நிறைவு செய்யும் நுட்பங்களாக பயன்படுத்தப்பட்டன.
கடந்த மூன்று தசாப்த காலத்தில் அரசியல் மற்றும் மனித நடவடிக்கைகளினால் ஏற்ப்பட்ட யுத்த நடவடிக்கைகள் இடப்பெயர்வுகள் பல்வேறு வகையான தாக்கங்களை இம்மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது சுமார் 14 தடவைகள் இப்பிரதேச மக்கள் இடப்பெயர்வுக்ளை ஒவ்வொரு இடப்பெயர்வின் போதும் இம்மக்கள் உயிர் மற்றும் உடமைகளை இழந்துள்ளனர் ஆகவே இது தொடர்பாக மிகுந்த அக்கறை செலுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. வாழ்வாதாரத்தினை மேம்படுத்துத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட பல திட்டங்கள் தொடர்சியான கண்காணிப்பு செயன்முறையற்ற நிலையில் கேள்விக்குறியாக காணப்படுகின்றது. ஆகவே சாத்தியமாக உள்ள வளங்களைப்பயன்படுத்தி வாகரைப்பிரதேச மக்களின் வாழ்வாதார நிலையினை உளரீதியான தாக்கங்களில் இருந்து இம்மக்களை விடுவிப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது