Abstract:
பொருளியல் கண்ணோட்டத்தில் நிலம் ஒரு அடிப்படை உற்பத்திக்காரணியாகவும் இயற்கை வளங்கள் பலவற்றின் உறைவிடமாகவும் காணப்படுகிறது. மனிதன் தனது வதிவிடத்திற்காக மட்டுமன்றி வாழ்வாதாரத்திற்காகவும் நிலத்தில் தங்கி வாழ்கின்றான். பேரினப் பொருளியல் நோக்கில் நிலம் ஒரு சமூகத்தின் பொருளாதாரத் தேவைக்காக மட்டுமன்றி அரசியல் நிலைத்து நிற்றல் குடித்தொகைப் பரம்பல் எதிர்கால சந்ததியினருக்கான வதிவிட மற்றும் பொருளாதாரத் தேவைகளுக்காகவும் வேண்டப்படும் ஒரு வழமாக உள்ளது. நிலப்பரப்பு சுருங்கத் தொடங்கும் போது அந்த சமூகம் சுருங்கத் தொடங்கும் அதன பொருளாதார நடவடிக்கைகள் எதிர்கால வியாபகம் பிற்கால சந்ததியினருக்கான எதர்பார்ப்புக்கள் சமூகவியல் தனித்தன்மைகள் என்பன சுருங்கத் தொடங்குவதுடன் அதனால் ஏற்படக்கூடிய அரசியல் பொருளாதாரப் பாதிப்புக்கள் நீண்ட காலத்துக்குப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நடைமுறை அனுபவமாகும். கடந்த இரு தசாப்த காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டிருந்த நில நெருக்கடிகள் பாரதூரமான அரசியல் பொருளாதார நெருக்கடிகளையும் ஏற்படுத்தியுள்ளன. இன முரண்பாட்டை மட்டுமன்றி அரசியல் நெருக்கடிகளையும் ஏற்படுத்தியுள்ளன இந்த ஆய்வு அம்பாறை மாவட்டத்தில் மோசமான நெருக்கடிகளையும் ஏற்ப்படுத்திய பொத்துவில் ஒலுவில் பிரதேசங்களின் நெருக்கடிகளைக் கவனத்தில் கொண்டு நெருக்கடியின் பின்னணி நெருக்கடிகளுக்கான காரணிகள் அதனால் ஏற்பட்ட பாதி்ப்புக்கள் இப்பிச்சினையைத் தீர்ப்பதற்கான வழிகளை இனங்காணுதல் போன்ற நோக்கங்களை அடைந்து கொள்வதை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேர்காணல் குழுநிலைக்கலந்துரையாடுதல் பாதிக்கப்பட்வர்களுடனான சந்திப்புக்ள் நேரடி அவதானம் போன்றவற்றின் மூலம் இவ்வாய்விற்கான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. புள்ளிவிபரங்கள் பயன்படுத்தப்பட்ட போதும் பண்பு சார் ஆய்வாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்விரு பிரதேசங்களின் நிலப்பிரச்சினை சிங்கள் முஸ்லிம் சமூகங்களுக்கிடையே இனமுரண்பாட்டைத் தோற்றுவித்துள்ளதுடன் நில ஆக்கிரமிப்பு நில உரிமை மறுப்பு போன்றவற்றின் மூலம் முஸ்லிம்களுக்கு பாரிய பொருளாதார சமூக இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. ஒலுவில் பள்ளக்காட்டு பகுதியை சேர்ந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான வயல் காணிகள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் இனப்பினச்சியின் ஒரு புதிய பரிமாணமாக இது காணப்படுகின்றது. உரிய தீர்வுகளை காண்பதில் ஏற்படும் காலதாமதங்கள் இப்பிரச்சினையை மேலும் வியாபகமாக்கலாம். முஸ்லிம் மற்றும் பௌத்த மதத்தலைவர்களின் இணக்கப்பாட்டுகளுடனான கலந்துரையாடல்கள் மூலமும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படுதல் அபிவிருத்திக்கும் சமூக நல்லிணக்கத்துக்கும் சிறந்த வழியாக அமையும்.