dc.description.abstract |
சிங்களவருக்கும், தமிழருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளில் மூலத்தைக்கொண்ட
இலங்கை உள்நாட்டுப் போர் 3 யூலை 1983 முதல் 2009 மே மாதம் விடுதலைப் புலிகள்
தோற்கடிக்கப்பட்டதுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தபின்
யுத்தம் தொடர்பான சம்பவங்கள் பலமொழிகளிலும் நூல் வடிவில் வெளிவந்தவண்ணமுள்ளன.
அந்தவகையில்தான் “இலங்கை பிளவுண்ட தீவு” எனும் நூல் சமந்த் சுப்ரமணியம் என்பவர் 2014
இல் எழுதிய “This Divided Island” எனும் ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இதனை
தமிழில் மொழிபெயர்த்தவர் கே.ஜி. ஜவர்லால் என்பவராவார். இந்நூலில் யுத்தமும்; அது இலங்கையின்
முக்கிய இனக்குழுக்களான சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மீது ஏற்படுத்திய தாக்கங்களும்
சற்று விரிவாக ஆராயப்பட்டுள்ளன. சிங்கள மக்கள் எதிர்கொண்ட சவால்களும், தமிழ் மக்களின்
பேரவலமும், முஸ்லிம் மக்களின் சிக்கல்களும் ஆங்காங்கே பரவலாக எழுதப்பட்டிருந்தாலும்
இங்குள்ள மூன்று பிரதான மதங்களும் அவற்றைப் பின்பற்றும் மனிதர்களும் எதிர்கொண்ட,
எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளில் சில இடங்களில் முரணான அல்லது யதார்த்தத்துக்குப்
புறம்பான கருத்துக்கள் சிலவற்றை இந்நூலில் அவதானிக்க முடிகின்றது. இந்நூலில் எழுதப்பட்டுள்ள
இலங்கை வாழ் முஸ்லிம்கள் யுத்த காலத்திலும், யுத்தம் முடிவடைந்ததன் பிற்பாடும் அனுபவித்த,
அனுபவித்துக்கொண்டிருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பான புனைவுகள் அல்லது உண்மைக்குப்
புறம்பான தகவல்களை இனங்கண்டு, அவற்றுக்குச் சரியான எதிர்வினைகள் அல்லது உண்மையான
தகவல்களை ஆதாரத்துடன் முன்வைப்பதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். இவ்வாய்வானது
மேற்குறித்த நூலினை நுணுகி ஆய்வு செய்வதற்காக விவரணப் பகுப்பாய்வு முறையினை
பயன்படுத்துவதாக அமைந்துள்ளது. கண்டறிதல்களில், இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள முஸ்லிம்கள்
தொடர்பான புனைவுகள் இனங்காணப்பட்டு அதற்குரிய சரியான தகவல்கள் ஆதாரபூர்வமாக
முன்வைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக இஸ்லாமிய கோட்பாடு தொடர்பான தவறுகள், இஸ்லாமிய
நாடுகள் தொடர்பில் பதிவாகியுள்ள தவறுகளுக்கான பதில்கள், இலங்கையில் முஸ்லிம்களின்
சனத்தொகை தொடர்பில் காணப்படும் தவறுகளும், அதற்கான சரியான புள்ளிவிபரங்களும்,
வடமாகாணத்தை விட்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பான புனைவுகள், அதற்கான
தெளிவான விளக்கங்கள், முஸ்லிம் வணக்கஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய பதிவுகளின்
போதாமை ஆகிய முக்கிய அம்சங்கள் இவ்வாய்வில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. |
en_US |