Abstract:
சீறாப்புராணம் என்னும் காப்பியம் உமறுப்புலவரால் இயற்றப்பட்டது. தமிழ்மொழியிலுள்ள இஸ்லாமிய
இலக்கியங்களுள் தலைசிறந்தது இதுவாகும். இவ்விலக்கியம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்லாமல்
அனைத்து தமிழ் மக்களினதும் இதயம் கவர்ந்ததாக திகழ்கின்றது. அரபு நாட்டில் அவதரித்த
அண்ணல் நபியின் பெருமையினைப் பறைசாற்றுவதாக இத்தமிழ்க் காப்பியம் அமைகிறது. இந்நூலில்
பெருமானாரின் வரலாறு முழுவதும் கூறப்படாத போதிலும் வாழ்வின் பெரும்பகுதி கூறப்பட்டுள்ளது.
இவ்விலக்கியமானது 5087 பாக்களையும், விலாதத்துக்(பிறப்புக்) காண்டம்,
நுபுவ்வத்துக்(தீர்க்கதரிசனக்) காண்டம், ஹிஜ்ரத்துக்(மக்காவிலிருந்து பெருமானார் மதினாவிற்குச்
சென்றமை) காண்டம் எனும் மூன்று காண்டங்களையும், 92 படலங்களையும் உடையது. இதில்
நுபுவத்துக் காண்டத்தில் பன்னிரண்டாவது படலமாக மானுக்குப் பிணைநின்ற படலம்
காணப்படுகின்றது. இப்படலத்தில் 72 பாக்கள் அமைந்துள்ளன. இப்படலம் மானிடரல்லாத உயிர்கள்
மீதும் பெருமானார்(ஸல்) அவர்கள் காட்டிய கருணைச் சம்பவம் ஒன்றினை விளக்குவதாக
அமைந்துள்ளது. ஒருநாள் மன அமைதிற்காக பெருமானார்(ஸல்) அவர்கள் காட்டிற்கு செல்கின்றார்.
அங்கு வேடன் விரித்த வலையில் பாலுட்டும் பெண்மான் ஒன்று சிக்கிக் கிடந்தது. அந்த மான்
பெருமானார் நபி(ஸல்) அவர்களிற்கு தனது வாழ்க்கைக் கதையைக் கூறி தன்னை விடுவித்துவிடுமாறு
வேண்டுகிறது. நபி(ஸல்) அவர்கள் மானிற்காக பிணை நிற்கிறார். விடுதலை பெற்ற பெண்மான்
மீண்டும் தன் துணைமானையும், குட்டியையும் சந்தித்து வேடன் விரித்த வலையில்
சிக்கியமையினையும், நபி(ஸல்) அவர்கள் தனக்காக பிணை நிற்பதனையும் விளக்குகின்றது. பின்னர்
நபி(ஸல்) அவர்களிடம் குட்டியுடன் செல்கின்றது. என்றவாறாக அமையும் இப்படலத்தில்
தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாட்டியல் எவ்வாறு அமைந்துள்ளது என்பதனை ஆராய்வதாக
இக்கட்டுரை அமைகின்றது. கலை மாமணி கவிகா முஷெரீப் அவர்களால் எழுதப்பட்ட “சீறாப்புராணம்
நுபுவத்துக் காண்டம் மூலமும் உரையும்” என்னும் நூலில் மானுக்கு பிணை நின்ற படலம் தொடக்கம்
விருந்தூட்டுப் படலம் ஈறாகவுள்ள பாடல்களும் அதற்கான உரைகளும் காணப்படுகின்றன. மணவை
முஸ்தபாவினால் தொகுத்து வெளியிடப்பட்ட “சிந்தைக்கினிய சீறா” எனும் நூலில் ‘சீறாவில்
காணப்படும் இஸ்லாமிய மரபுகள், சீறாவின் காப்பியப் பண்புகள், உமறுப் புலவரின் இலக்கியத்திறன்,
சீறாப்புராணத்தில் இயற்கை வர்ணணைகள்’ முதலான பல்வேறு கட்டுரைகள் இடம்பெறுகின்றன.
முகம்மது உவைஸின் “இஸ்லாம் வளர்த்த தமிழ்” என்னும் நூலில் சீறாப்புராணம் (1703) எனும்
கட்டுரையும் இடம்பெறுகின்றது. இது சீறாப்புராணம் தொடர்பான அறிமுகமாகவே அமைகின்றது.
ஆகவே சீறாப்புராணத்தினையும் தொல்காப்பியத்தையும் இணைத்து ஆய்வுகள் இடம்பெறாத
இடைவெளியை நிரப்பும் முகமாக இவ்வாய்வு எழுகின்றது. விளக்கமுறைத் திறனாய்வின் துணைக்
கொண்டு இவ் ஆய்வு தெளிவுபடுத்தப்படுகின்றது. இவ்வாய்வின் மூலமாக சீறாப்புராணத்தில்,648
மானுக்குப் பிணை நின்ற படலத்தில் காணப்படும் தொல்காப்பியர் கூறிய மெய்ப்பாடுகள் பற்றிய
தெளிவான விளக்கம் முன்வைக்கப்படுகின்றது.