Abstract:
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் பல பருவங்களையும் பல காலகட்டங்களையும்
கடக்கின்றனர். அந்த ஒவ்வொரு பருவங்களிலும் ஒவ்வொரு காலகட்டங்களிலும் சில சம்பவங்கள்,
சில சம்பிரதாயங்கள் சில நிகழ்வுகள் அவர்களுக்கு முக்கியத்தும் உடையதாகக் காணப்படுகின்றன.
அவ்வாறு இளமைப் பருவத்தில் காணப்படுகின்ற முக்கியமான நிகழ்வாகத் திருமணம் உள்ளது. கால,
சூழல் சமூக அமைப்பைப் பொறுத்து திருமண நிகழ்வில் சில பிரச்சினைகள் தோன்றுகின்றன.
மலையக முஸ்லிம் சமூகத்திலே திருமணத்தின் போது இவ்வாறு தோன்றும் பிரச்சினைகள் நயீமா
சித்தீக்கீன் வாழ்க்கை வண்ணங்கள் என்ற சிறுகதைத் தொகுதியில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இச்சிறுகதைத் தொகுதி இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு சிந்தனை வட்டத்தால் வெளியிடப்பட்டது.
இச்சிறுகதைத் தொகுதியின் ஊடாக சீதனப்பிரச்சினை உள்ளடங்களாக மணமகன் தொடர்பாக
பெய்யான தகவல்களைச் சொல்லுதல், திருமணம் முடித்துக் கொடுக்கப்படும் பெண்கள் கணவனின்
வீட்டில் கொடுமைப்படுத்தப்படல், ஏற்கனவே மணமகன்மார் களவாக வேறு திருமணங்களைச்
செய்திருத்தல், பொருத்தமான மணமகனும் மணமகளும் மணம் முடிக்கப்படாமை, படித்த
இளைஞர்கள் திருமணத்தின் மூலம் பணக்கார வீட்டவர்களின் அடிமையாக்கப்படுதல் போன்ற
இன்னோரன்ன பல பிரச்சினைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அத்தகைய பிரச்சினைகளை
ஆராய்வதாக இவ்வாய்வு அமைந்துள்ளது.