dc.description.abstract |
எண்ணிம நூலகம் (Digital Library) இன்றைய நவீன தொழிநுட்ப காலகட்டத்தில் மிக முக்கியமான
பேசுபொருளாக மாறிவருகின்றது. இலங்கையை அடிப்படையாகக்கொண்டு 2005 ஆம் ஆண்டிலிருந்து
நூலகம் எனும் எண்ணிம நூலகம் (noolaham.org) சமகாலத்தில் தமிழ்மொழி மூல நூல்களை
மையப்படுத்தி இயங்கிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய எண்ணிம நூலகமாகக் கருதப்படுகிறது. பல
உப பிரிவுகளைக்கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இவ் எண்ணிம நூலகமானது இலங்கையில்
வாழ்கின்ற முஸ்லிம்களின் எழுத்தாவணங்களை பதிவு செய்யும் நோக்கில், இலங்கைவாழ் தமிழ்
பேசும் முஸ்லிம்கள் தொடர்பான வெளியீடுகளைத் தொகுத்து ஒரே பார்வையில் வழங்கும் ஆவணக
முயற்சியாக முஸ்லிம் ஆவணகம் என்ற சிறப்பு சேகரமொன்றை(special collection) உருவாக்கி,
ஆவணங்களை இலத்திரனியல் வடிவில் பதிவு செய்து வருகிறது. ஏராளமான முஸ்லிம்களின்
ஆவணங்கள் இலங்கையில் காணப்படுகிறபோதும், இவ் எண்ணிம நூலகத்தில் முஸ்லிம்களின்
எழுத்தாவணம் தொடர்பான பதிவுகள் மட்டுமே சேகரிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று ஒப்பீட்டளவில்
மிகக்குறைந்த எழுத்தாவணங்களையே (இதுவரை 221 ஆவணங்கள் மட்டும்) எம்மால்
பெற்றுக்கொள்ள முடிகிறது. இச்சிறப்பு சேகரம் முஸ்லிம் சமூகம் குறித்த முக்கியமான ஆவணகமாக
மாறிவருவதால் தொழிநுட்ப ரீதியான தீர்வுகளை கண்டடைய, முஸ்லிம்கள் தொடர்பான
ஆவணங்களை எண்ணிமப்படுத்துவதில் காணப்படுகின்ற சவால்களை இனங்காண்பதே இவ்வாய்வின்
நோக்கமாகும். இவ்வாய்வானது மேற்குறித்த இணையத்தளத்தை நுணுகி ஆய்வு செய்வதற்காக
விவரணப் பகுப்பாய்வு முறையினை பயன்படுத்துவதாக அமைந்துள்ளது. அந்தவகையில் பிரதானமான
சவால்களாக முஸ்லிம் ஆவணங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள சரியான ஒழுங்கு
முறையின்மை, வெளியீடுகளை இலத்திரனியல் வடிவில் வெளியிட நூலாசிரியர்களினதும்,
பதிப்பாளர்களினதும் பதிப்புரிமை கிடைக்காமை, நூலக இணையத்தளத்தை பராமரித்து, செயற்படுத்த
மனித வளங்களும், நிதி வளங்களும் போதிய அளவு இல்லாமை, முஸ்லிம் சமூகங்களிலிருந்து
நேரடிப்பங்களிப்புகள் கிடைக்காமை மற்றும் தொழிநுட்ப விடயங்கள் தொடர்பில் தெளிவின்மை
போன்ற காரணிகள் முக்கியமான சவால்களாக இனங்காணப்பட்டுள்ளன. இச்சவால்களை
வெற்றிகொள்வதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் ஆவணங்களை ஓரளவு முழுமையாக
எண்ணிமப்படுத்தி, எதிர்காலத்தில் மாணவர், ஆய்வாளர், சமூகச் செயற்பாட்டாளர், எழுத்தாளர் என
அனைவரும் பயன்பெறும் வகையில் முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியல்சார் அம்சங்களை ஒரே
பார்வையில் பதிவு செய்யக்கூடிய வாய்ப்பினை பெறமுடியும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். |
en_US |