Abstract:
படைப்பாளிகளால் உருவாக்கப்படும் படைப்புக்களில் ஒரு சில மட்டுமே இன, மத வேறுபாடுகள்
கடந்து நின்று பயன் தரக்கூடியன. இத்தகைய சிறப்பினைப் பெறுவது வள்ளுவப் பெருந்தகையினால்
படைக்கப்பட்ட ‘உலகப் பொதுமறை’யாகிய திருக்குறள். அறநூலாக அறியப்படும் இந்நூல் மனிதனின்
எப்பருவத்தினருக்கும் பயன் தரக்கூடிய செய்திகளை கொண்டது. திருக்குறளை மேற்கோள் காட்டாத
பிற்காலப் படைப்புக்களே இல்லையெனும் அளவிற்கு திருக்குறளின் முக்கியத்துவம்
உணரப்பட்டுள்ளது. சோழர் காலத்தில் உமாபதி சிவாச்சாரியார் திருக்குறளை பின்பற்றியே தனது
திருவருட்பயனை படைத்தார். நான்கு பால் வகைகளில் திருக்குறள் கூறாது விட்ட வீட்டுப்பாலை
திருவருட்பயன் கூறியது. இவ்வாறு திருக்குறளின் தாக்கம் பிற்கால இலக்கியங்களில் பெரிதும்
காணப்பட்டது. இவ்வரிசையில் பதுருத்தீனால் எழுதப்பட்ட தீன்குறளும் திருக்குறளை தழுவி
எழுதப்பட்ட இலக்கியமாகும். ‘தீன்’ என்பது இஸ்லாமிய மார்க்கத்தைக் குறிப்பது. திருக்குறள்
போன்றே இரு அடிகளி;ல் வெண்பா யாப்பை பயன்படுத்தி படைக்கப்பட்டிருக்கும் தீன்குறள் எத்தகைய
அடிப்படைகளில் திருக்குறளை தழுவி நிற்கின்றது என்பதையும் இஸ்லாமிய மார்க்க அம்சங்களையும்
பிற கருத்துக்களையும் இவ்விலக்கிய அமைப்பைப் பயன்படுத்தி எங்கனம் இந்நூல்
வெளிப்படுத்தியுள்ளது என்பதையும் ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கங்களாகும்.
அறக்கருத்துக்களை வெளிப்படுத்த உகந்த யாப்பாகிய வெண்பாவை இஸ்லாமிய மார்க்கக்
கருத்துக்களையும் இணைத்துப்பாட எவ்வகையான உத்திகளை பயன்படுத்தியிருக்க முடியும் என்பது
ஆய்வின் பிரச்சினையாக உள்ளது. இவ்வாய்விற்காக பதுருத்தீனின் தீன்குறளும் வள்ளுவரின்
திருக்குறளும் முதன்மைத் தரவுகளாக பயன்படுகின்றன. திருக்குறள் தொடர்பாக எழுதப்பட்டுள்ள பிற
நூல்களும் கட்டுரைகளும் இரண்டாம் நிலைத்தரவுகளாக பயன்படுகின்றன. ஒப்பீட்டு ஆய்வு
முறையியலில் அமையும் இவ்வாய்வு பகுப்பாய்வையும் சில இடங்களில் பயன்படுத்துகின்றது.
இவற்றின் மூலம் தீன்குறள், அறத்துடன் இணைத்து மார்க்கம் பற்றியும் உரைப்பதற்கு திருக்குறளின்
நலன்களில் கணிசமானவற்றை பயன்படுத்தியுள்ளது எனத் துணியலாம்.