Abstract:
இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் இஸ்லாமிய அறிவினை விருத்தி செய்து சமய மறுமலர்ச்சியை
ஏற்படுத்தி பெரும் பங்காற்றிய பெருமை அறபு மத்ரஸாக்களையே சாரும். மூடநம்பிக்கையிலும்,
மௌட்டீகத்திலும் மூழ்கிக்கிடந்த மக்களுக்கு இஸ்லாமிய மார்க்க விளக்கங்களை வழங்கி
இஸ்லாமிய மார்க்கத்தைக் கற்றறிந்த அறிஞர்களை உருவாக்க இவ்வறபு மத்ரஸாக்களே
காரணியாகத் திகழ்ந்தன. இம்மத்ரஸாக்களில் மாணவர்களின் கல்வி விருத்தியை நோக்காகக்
கொண்டு கற்பிக்கப்படும் பாடசாலைக் கல்வி விதானம் மாணவர்களின் ஆளுமையையும், ஆற்றல்
திறன்களையும் பரந்த அறிவையும் வளர்ப்பதற்கு பெரிதும் உதவக் கூடியதாகக் காணப்படுகின்றது.
இங்கு இஸ்லாமியக் கற்கை நெறிகளும் பாடசாலைக் கல்வி விதானமும் ஒரே காலப்பகுதியில்
மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றமையால் மாணவர்கள் உடல், உள மற்றும் கல்வி ரீதியான பல
பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுக்கின்றனர். அத்துடன் மத்ரஸாக்களில் காணப்படும்
வளப்பற்றாக்குறைகளும் மாணவர்களின் கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளன.
அவ்வகையில் இவ்வாய்வானது காலி மாவட்டத்திலுள்ள இப்னுஅப்பாஸ் அரபுக் கல்லூரியையும்
அல்பயான் அரபுக் கல்லூரியையும் மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. ஓரே காலப்பகுதியில்
பாடசாலைக் கல்வி விதானத்தையும் மார்க்கக் கல்வியையும் கற்றுக் கொள்வதால் எவ்வாறான
பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள் என்பதே இவ்வாய்வின் பிரச்சினையாகக்
காணப்படுகின்றது. மத்ரஸா மாணவர்கள் பாடசாலைக் கல்வியைக் கற்றுக் கொள்வதிலுள்ள
சவால்களையும் பிரச்சினைகளையும் இனங்காணல், பாடசாலைக் கல்வியைக் கற்றுக் கொள்வதற்குத்
தேவையான வளங்களிலுள்ள வளப்பற்றாக்குறைகளை இனங்காணல், இம்மத்ரஸாக்களில்
பாடசாலைக் கல்வி கற்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தல் என்பன இவ்வாய்வின்
நோக்கங்களாகும். இவ்வாய்வில் பெறப்பட்ட தகவல்களின் பெறுபேராக அறபு மத்ரஸாக்களில்
இஸ்லாமியக் கற்கைநெறிகளை மேற்கொள்ளும் மாணவர்கள் பாடசாலைக் கல்வி விதானத்தையும்
கற்றுக்கொள்வதனால் ஏற்படும் அறிவு விருத்தி, திறன்விருத்தி போன்ற நேர்மறையான தாக்கங்களும்
உடல், உள மற்றும் கல்வி ரீதியான எதிர் மறையான தாக்கங்களும் இனங்காணப்பட்டன. அத்துடன்
அறபு மத்ரஸாக்களில் கல்வி கற்கும் மாணவர்கள் பாடசாலை கல்வி விதானத்தைக் கற்றுக்கொள்வதில்
முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளாக வளப்பற்றாக்குறை, மாலை நேர வகுப்புக்கள், பாடமீட்டலுக்கும்
சுயகற்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் வழங்கப்பட்டிருக்கும் நேரம் போதாமை, ஆசிரியர்
பற்றாக்குறை, இரு கற்கை நெறிகளையும் ஒரே காலப்பகுதியில் கற்பதனால் ஏற்படும் உடல், உள
ரீதியிலான தாக்கங்கள் போன்றவை இனங்காணப்பட்டன. அறபு மத்ரஸாக்களில் மாணவர்கள்
பாடசாலைக் கல்வி விதானத்தை கற்பதில் உள்ள சவால்களை இனங்காண வேண்டும். அங்கு
அவர்கள் எதிர்நோக்கும் கற்றல் சார்ந்த பிரச்சினைகள் அடையாளப்படுத்தப்பட வேண்டும். போன்றன
ஆய்வின் முடிவில் பரிந்துரையாக முன்வைக்கப்பட்டன.