Abstract:
இஸ்லாமிய சட்டக் கோட்பாடுகளையும் எமது நாட்டு கலாசார, சமூக மாற்றங்களையும் உள்வாங்கி
தனியார் சட்டப் பரப்பில் தனக்கென்று ஒரு தனியிடம் கொண்டிருக்கும் சட்டமாக முஸ்லிம் சட்டம்
திகழ்கின்றது. முஸ்லிம் சட்டமானது பிறப்பின் மூலமோ, மதமாற்றத்தின் மூலமோ இஸ்லாமிய
நம்பிக்கையைக் கொண்ட அனைத்து முஸ்லிம்களுக்கும் ஏற்புடையதாகும். ஆரம்ப காலங்களில்
முஸ்லிம் சட்டம் சம்பந்தமான விடயங்கள் மொகமதியன் கோவையினால் ஆளப்பட்ட போதும்
காலப்போக்கில் இச் சட்டமானது நியதிச் சட்ட வடிவம் பெற்றது. இலங்கை பன்மைத்துவ கலாசாரம்
கொண்ட நாடாகையால் அப் பன்மைத்துவமானது திருமணம் தொடர்பான சட்டங்களில்
பிரதிபலிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. திருமணம் என்பது உணர்வுபூர்வமான ஒரு விடயமாகப்
பார்க்கப்படுவதால் அதுதொடர்பான சட்டங்களை இயற்றும் போது சட்டவாக்கசபையானது ஒவ்வொரு
சமூகத்தினதும் கலாசாரப் பெறுமானங்களைக் கருத்திற்கொண்டு அவற்றை ஏற்று அங்கீகரித்து
சட்டவாக்கத்தினை மேற்கொண்டுள்ளமையை காணக்கூடியதாக உள்ளது. அவ்வகையில்
இலங்கையில் திருமணம் தொடர்பான விடயங்களை கையாளுகின்ற மூன்று பிரதான நியதிச்சட்டங்கள்
உள்ளன. நாட்டின் பொதுச்சட்டத்தின் கீழ் திருமண ஒப்பந்தமொன்றில் ஈடுபடுபவர் இல 19, 1907 ஆம்
ஆண்டின் திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டத்தின் தேவைப்பாடுகளை பூர்;த்தி செய்யவேண்டும்.
கண்டியச் சட்டத்தினால் ஆளப்படுமொருவர் இல 44, 1952 ஆம் ஆண்டின் கண்டிய திருமணம் மற்றும்
விவாகரத்துச் சட்டத்தின் தேவைப்பாடுகளுக்கமைய திருமண ஒப்பந்தமொன்றில் ஈடுபடமுடியும்.
இச்சட்டத்தின் கீழ் இரண்டு கண்டிய திறத்தவர்களுக்கிடையிலான திருமணம் மட்டுமே செய்யமுடியும்.
அவ்வகையில் முஸ்லிம் ஒருவரின் விவாக, விவாகரத்து தொடர்பில் ஆளுகின்ற நியதிச் சட்டமாக
முஸ்லிம் திருமண விவாகரத்துச் சட்டம் இல 13, 1951 என்பது காணப்படுகிறது. இந்
நியதிச்சட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் ஒருவர் வலிதான திருமண
ஒப்பந்தமொன்றினுள் நுழைவதற்கான அடிப்படைத் தேவைப்பாடுகளையும், அவை எவ்வாறு நாட்டின்
பொதுச் சட்டத்தின் கீழான திருமண ஒப்பந்தமொன்றில் உள்நுழைவதற்கான தேவைப்பாடுகளிலிருந்து
வேறுபடுகின்றன என்பதையும், திருமணம் தொடர்பில் நாட்டில் ஒருசீர்த்தன்மை கொண்ட
சட்டமுறைமையினை ஏற்படுத்துவது சாத்தியமானதா என்பது பற்றியும், முஸ்லிம் திருமண,
விவாகரத்துச் சட்டத்திற்கு காலமாற்றத்திற்கு உகந்த வகையில் சில ஏற்பாடுகளை திருத்தியமைத்தல்
தொடர்பில் பரிந்துரைகளையும் முன்வைக்கலாமென கருதுகிறேன்.