Abstract:
சமூகப் பொருளாதார அம்சங்களை பொறுத்தவரையில், ஸகாத் மிக முக்கிய அங்கமாக
விளங்குகின்றது. குறிப்பாக வறுமையை சமூக வாழ்விலிருந்து விரட்டி பொருளாதார சமநிலையை
ஏற்படுத்துவதில் கூடுதலான கவனம் செலுத்துகின்றது. இது தவிர பொருளாதார ரீதியில் சமூகம்
எதிர்நோக்கும் பல பிரச்சினைகளை தீர்ப்பதன் மூலம் சமூகத்தை மேம்படுத்த உதவுகின்ற ஒரு
பொருளாதார ஒழுங்காகவும் அது செயற்படுகின்றது. ஸகாத் பொருட்களை சேகரிக்கவும்,
பாதுகாக்கவும், அவற்றை விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யவும், அவை மக்களுக்கு பிரயோசனமாக
அமைய வழிகாட்டவும் கூட்டமைப்பு தேவைப்படுகின்றது. முஸ்லிம் சமூகம் கூட்டாக இக்கடமையை
நிறைவேற்றுகின்ற போதுதான் இதன்மூலம் எதிர்பார்க்கப்படுகின்ற பலாபலன்களையும்,
நன்மைகளையும் உச்சமாக அடைந்து கொள்ள முடியும். எமது ஆய்வுப் பிரதேசமான பறகஹதெனிய
கிராமத்தின் வறுமை ஒழிப்பில் பைதுஸ் ஸகாத் நிறுவனத்தின் பங்களிப்பினை ஆராய்வதே
இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்வானது பறகஹதெனிய பிரதேசத்தின் பைதுஸ் ஸகாத்
நிறுவனங்களின், 2011 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரையுள்ள தகவல்களை
மையப்படுத்தியதாகும். இவ்வாய்வு முறையியல் பண்பு ரீதியான முறையை தழுவியதுடன், முதலாம்
இரண்டாம் தரவுகளை கொண்டமைந்துள்ளது. இவ்வாய்வின் பெறுபேறாக, பறகஹதெனிய
பிரதேசத்தின் வறுமையை ஒழிக்க பைதுஸ் ஸகாத் நிறுவனங்கள் பங்களிப்பு செய்கின்றன. எனினும்
, இரு பைதுஸ் ஸகாத் நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து தனது செயற்பாடுகளை மேற்கொண்டால்
வறுமை ஒழிப்பில் இன்னும் வினைத்திறனான பங்களிப்பினை வழங்கலாம்.