Abstract:
இன்றைய உலகில் இஸ்லாமியக் கருத்துக்களின் பரப்பும், அதன் அனுபவ ரீதியான பொருத்தப்பாடும்
பற்றிப் பல்வேறு தளங்களில் பேசப்படுகின்றது. இஸ்லாம் ஒரு பூரண வாழ்க்கை நெறியாக
ஏற்கப்பட்டுள்ளது ஆனால் எல்லா விதமான விஞ்ஞானங்களையும், வாழ்வியல் நெறிகளையும்
உள்ளடக்கியதான அறிவியல் மற்றும் மெய்யியல் சிந்தனைகளுக்கு இடமளிக்கப்பட்டுள்ளதா என்பது
ஓர் அறிவு பூர்வமான வினாவாகும். இஸ்லாமிய சமய செயற்பாடுகள் சமயமா? இல்லை அது ஓர்
நடைமுறை சார் நவீன உலகிற்கான தீர்வுகளைக் கொண்டுள்ளதா? என்பது தொடர்பான பல்வேறு
உலகளாவிய உரையாடல்கள் புத்தி ஜீவிகளிற்கிடையேயும், சாதாரண மக்கள் வாழ்வியலிலும்
தொடர்புபட்டதாகக் காணப்படுகிறது. மனித வாழ்வு அன்றாடம் பல்வேறுபட்ட அனுபவ ரீதியான
பிரச்சினைகளைக் கொண்ட ஓர் நடைமுறைக் கட்டமைப்பாகும். இவ்வாறான நிலையில் ஒரு
இஸ்லாமியர் தனது அனைத்து அனுபவ ரீதியான பிரச்சினைகளுக்கும் இஸ்லாமும் அது சார்ந்த
மார்க்க அறிஞர்களும் அல் குர் ஆன், ஹதீஸ் அடிப்படையில் தமக்கான அனுபவ ரீதியான தீர்வுகளை
வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால் அனுபவம் சார்ந்த மானிடப் பிரச்சினைகளைத்
தீர்க்க இஸ்லாமிய சமயத்தின் வழிகாட்டல்; போதுமானதாக உள்ளதா? அதற்கான புதிய
அணுகுமுறைகள் ஊடாக அதனை இன்னும் வலிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளதா?
அதற்கான புதிய அணுகுமுறை சார்ந்த வழிமுறைகள் என்ன? இஸ்லாமிய வரலாற்றில் சமூக
விஞ்ஞானத் துறைகளில் தமது பங்களிப்பை வழங்கிய முன்னோடிகள் எவ்வாறான
அணுகுமுறைகளைக் கொண்டிருந்தனர் ? அனுபவ அறிவுசார் பிரச்சினைகளுக்கு அவர்களது தீர்வுகள்
எவ்விதமாக அமைந்திருந்தன ? என்பதையும் தொடர்புபடுத்தியதாக இவ்வாய்வுக் கட்டுரை
அமைகின்றது. இவ் ஆய்வினை சிறப்பாக்கிக் கொள்ள விபரணவியல், ஒப்பீட்டு முறை
பயன்படுத்தப்படுகின்ற அதேவேளை மேலைத்தேய மெய்யியல் கருத்தான அனுபவ வாதம் இஸ்லாமிய
வாழ்வியல் தத்துவத்தில் எவ்வாறான செல்வாக்கினைச் செலுத்திக் கொண்டிருக்கின்றது என்பது
தொடர்பாகவும் ஆராய்கின்றது.