Abstract:
தமிழ் இலக்கிய வரலாற்றில் இற்றைவரைப் பல்வேறுபட்ட இலக்கியங்கள் முகிழ்த்துள்ளன. அவை
ஒவ்வொன்றும் தத்தமளவில் தனித்துவமானவை. நெடுநாட்தொட்டு தமிழ் இலக்கியச் சூழலில் பல
மதங்கள் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன. அவற்றின் செல்வாக்கினால் தமிழ்ச் சூழலில்
பல்வேறுபட்ட இலக்கியங்கள் கருக்கொண்டன. இதன் விளைவாகத் தமிழ் இலக்கிய உலகம் புதிய
தளங்களைத் தரிசிக்க எத்தனித்தது எனலாம். தமிழ்ச் சூழலில் முதன் முதலில் செல்வாக்குச்
செலுத்திய பிற தேசத்தினைச் சார்ந்த மதமாக இஸ்லாம் மதம் விளங்குகிறது. இது கிறிஸ்தவம்
தமிழ்ச் சூழலில் செல்வாக்குச் செலுத்த முற்படும் முன்னரே தமிழ்ச் சூழலுடன் இணைந்து விட்டது.
தமிழ்ச் சூழலுடன் இஸ்லாம் கொண்டிருந்த நெடுநாட் தொடர்பை இலக்கியங்களினூடாக அறிய
முடிகிறது. தமிழ்ச் சூழலுடன் இணைந்துகொண்ட இஸ்லாமிய சமயம்சார் புலமையாளர்கள் தமது
மார்க்கம்சார் கொள்கைகளை வெளிப்படுத்த தமிழில் ஏற்கனவேயிருந்த இலக்கியவடிவங்களை
மாத்திரம் கையாளாது, புதிய இலக்கிய வடிவங்களையும் பயன்படுத்த எத்தனித்தனர். இவர்தம் இம்
முயற்சியானது தமிழ் இலக்கியவுலகினைச் செம்மையுறச் செய்ததது எனலாம். அவ்வகையில்
இஸ்லாமியப் புலமையாளர்களால் தமிழ்மொழிக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இலக்கிய வடிவங்களுள்
கிஸ்ஸா இலக்கிய வடிவமும் ஒன்றாகும். இக் கிஸ்ஸா இலக்கியங்கள் மக்கள் வாழ்கின்ற
சூழலிற்கேற்ப தம் மார்க்கம்சார் கொள்கைகளை எடுத்தியம்ப முற்பட்டன. படைப்பிலிருந்து வாசகன்
விலகாதிருக்கும் வண்ணம் இலக்கியங்களைப் படைப்பதிலேயே புலமையாளனின் ஆளுமை
தங்கியுள்ளது. இதனை நன்குணர்ந்திருந்த இஸ்லாமியப் புலமையாளர்கள், தமிழ்ச் சூழலுடன்
ஒன்றிணைந்துவிட்ட, தமிழைப் பேச்சு வழக்காகக் கொண்ட மக்களுக்கு அவர்தம்
சூழலிற்கேற்றவகையில் அமையுமாறு படைப்புக்களைப் படைக்க எத்தனித்தனர். இதனால், கிஸ்ஸா
இலக்கியங்களில் தமிழ் - இஸ்லாமிய ஊடாட்டத்தினை இயல்பாகவே இனங்காண முடிகிறது. கிஸ்ஸா
இலக்கியங்களில் வெளிப்படும் தமிழ் - இஸ்லாமிய ஊடாட்டத்தினை தெளிவுபடுத்தும் முகமாகக்
கருக்கொள்ளும் இவ்வாய்வானது விரிவஞ்சி, சைத்தூன் கிஸ்ஸாவை அடிப்படையாகக் கொண்டு
கிஸ்ஸா இலக்கியங்களில் புலப்படும் தமிழ் - இஸ்லாமியப் பண்பாட்டு ஊடாட்டத்தை விளக்க
முற்படுகின்றது. இவ்வாய்விற்கு முதன்மை ஆதாரமாக சைத்தூன் கிஸ்ஸாவே எடுத்துக்
கொள்ளப்படுகின்றது. விளக்கமுறைத் திறனாய்வு,விவரண அணுகுமுறை,கலாசார அணுகுமுறை,
ஒப்பீட்டு அணுகுமுறை ஆகியவற்றின் மூலம் இவ்வாய்வு தெளிவுபடுத்தப்படுகின்றது. இவ்வாய்வின்
மூலம் கிஸ்ஸா இலக்கியங்களில் வெளிப்படும் தமிழ் - இஸ்லாமிய ஊடாட்டம் குறித்த தெளிவான
விளக்கம் முன்வைக்கப்படுகின்றது.