Abstract:
போதைப் பொருள் பாவனை குடும்பப் பிரச்சினைகளுக்கும் மகளிர் மற்றும் சிறுவர்கள்
பாதிப்படைவதற்கும் அடித்தளமிட்டுள்ளது. ஏறாவூர் பொலிஸ் பிரிவில் பயன்பாட்டிலுள்ள போதைப்
பொருள் வகைகளை அடையாளப்படுத்துவதோடு, போதைப் பொருளினால் மகளிர் மற்றும் சிறுவர்கள்
பாதிப்புறும் வடிவங்களையும் இனங்காணுதல் இவ்வாய்வின் நோக்கங்களாகும். பண்பு ரீதியான ஆய்வு
முறையிலமைந்த இவ்வாய்வு, ஆய்வுப் பிரதேசத்தில் போதைப் பொருள் தொடர்பான
பிரச்சினைகளைக் கையாளுகின்ற பொலிஸ் நிலைய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் உயர்
அதிகாரி மற்றும் சமூக நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் அடங்கலாக 10 நிறுவனங்களின்
முக்கியஸ்தர்களிடம் பெறப்பட்ட நேர்காணலின் பகுப்பாய்வினையும் மேலும் பெறப்பட்ட
ஆவணங்களின் மீளாய்வினையும் மையப்படுத்தியது. அவற்றின்படி பதிவு செய்யப்படுகின்ற குற்றச்
செயல்களில் போதைப் பொருள் தொடர்பான குற்றச்செயல்களே அதிகமாகும். அதிலும், மதுபாவனை
முதன்மை இடத்தைப் பெற்றிருப்பதோடு, அதற்கு அடுத்தடுத்த நிலையில் கஞ்சா, ஹெரோயின்,
புகையிலை, அபின் என்பன காணப்படுகின்றன. போதைப் பொருள் பாவனையின் காரணமாக மகளிர்
மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் வடிவங்களில் மகளிர் எதிர் கொள்ளும்
பிரச்சினைகளே அதிகமாகும். அதில் குடும்பப் பிரச்சினைகள் முன்நிலை பெற்றுள்ளது. அடித்தல்,
தொந்தரவு செய்தல், ஏமாற்றுதல் போன்ற வடிவங்களில் மகளிர் பாதிக்கப்படுகிறார்கள். சிறுவர்களைப்
பொறுத்தவரை அடித்தல், சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே, போதைப் பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்கான முன்னெடுப்புக்கள், அதற்கான
வழிகாட்டல்கள் பற்றிய முன்மொழிவுகளைத் தருவதாகவும், எதிர் காலத்தில் இவ்விடயத்தில்
ஆய்வை மேற்கொள்வோருக்கு உதவுவதாகவும் இவ்வாய்வு அமைகிறது.