Abstract:
ஆங்கிலேயரின் காலத்திலிருந்தே கெகுணகொல்ல பிரதேசம் வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்ததாகவும் வர்த்தக போக்குவரத்துப் பாதையாகவும் காணப்பட்டு வந்தது. அத்துடன் கல்வி,
ஆன்மீகம் போன்றவற்றிலும் பிரசித்தி பெற்றதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் காணப்பட்டது.
கெகுணகொல்ல பிரதேசமானது தொன்மையான வரலாற்றைக் கொண்டதாகவும், முஸ்லிம்
சமூகத்திற்கு முக்கியமான ஒர் அடையாளமாகவும் பல பெறுமதியான வளங்களைக் கொண்டுள்ள
போதிலும் இது வரை காலமும் எவராலும் முக்கியத்துவம் கொடுக்கப்படாத காரணத்தினாலும் எந்த
ஒரு முழுமையான ஆய்வுக்கும் உட்படுத்தப்படாத காரணத்தினாலும் இக்குறையை நிவர்த்தி செய்ய
வேண்டும் என்ற அவாவில் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இந்த தொன்மையான
வரலாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் ஏனையோருக்கும் இது பற்றிய அறிவு எட்டப்பட
வேண்டும் என்பதும் குருணாகல் மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கென்று தனித்துவமான ஒரு பிரதேசம்
உள்ளது என்பதை வெளிச்சமிட்டுக் காட்ட வேண்டும் என்பதுவுமே இவ்வாய்வின் முக்கிய
நோக்கமாகும். இந்த ஆய்வில் முதற்தர மற்றும் இரண்டாந்தர ஆதாரங்கள் தேவை கருதி
பயன்படுத்தப்பட்டுள்ளன. முதற்தர ஆதாரங்களாக நேர்காணல்கள் மற்றும் அறிக்கைகளிலிருந்து
பெறப்பட்ட தகவல்கள் என்பனவும், இரண்டாந்தர ஆதாரங்களாக பிரதேசத்தினால் வெளியிடப்பட்ட
சஞ்சிகைகள், ஆவணங்கள் சமகாலத்துப் படைப்புக்கள் என்பனவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றினை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது முடிவாக இப்பிரதேசமானது மூன்று
நூற்றாண்டுகளுக்கு மேலாக முஸ்லிம்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட பெரும்பான்மை முஸ்லிம்களையும்
கொண்ட பிரதேசமாகவும் அனைத்து வளங்களையும் கொண்ட பிரதேசமாகவும் கருதப்படுகிறது.