Abstract:
தமிழ்ச் சூழலில் கருக்கொண்ட இலக்கியங்களுள் காலத்தால் முந்திய இலக்கியப்
படைப்புக்களாகச் சங்க இலக்கியங்களை அடையாளப்படுத்துவர். பொதுவாகச் சங்க காலத்தினை
கி.பி. 1-3 வரையான நூற்றாண்டுகளென்பர்.எனினும், கி.மு 3 தொடக்கம் கி.பி 3வரையான
நூற்றாண்டுகளே சங்க காலமென ஆய்வறிஞர் சுட்டுவர். சங்க காலம் குறித்து நோக்க
முற்படுவோர் பெரும்பாலும் அக் கால இலக்கியப் பண்புகளாக காதல், போர் என்பவற்றை
மாத்திரம் சுட்டிவிட்டு நழுவிக் கொள்வர். இருபதாம் நூற்றாண்டின் நடுப் பகுதியில், இவ்
வழக்கத்தில் மாறுதல் ஏற்பட்டது. பல்வேறுபட்ட தத்துவக் கோட்பாடுகளின் வழிநின்று சங்க
இலக்கியங்களை அணுகுகின்ற வழக்கம் இக் காலப்பகுதியில் தீவிரம் பெறத் தொடங்கிற்று.
மரபிலக்கியங்கள் உணர்த்தும் கருத்தொவ்வொன்றையும் நுணுகி ஆராய்ந்து, அவற்றைத் தர்க்க
ரீதியாக அணுகுகின்ற போக்கும் இக் காலகட்டத்தில் வளர்ச்சி கண்டது. அவ்வாறு
மரபிலக்கியங்களை நவீன கோட்பாடுகளினூடாக மறுவாசிப்பிற்குட்படுத்தியவர்களுள் ஈழத்தவர்கள்
முன்னிலை வகித்தனர் எனலாம். சங்க இலக்கியங்களினூடாகப் புலப்படும் சமுதாயம்,
மேலெழுந்தவாரியாகச் சுட்டப்படுவதைப் போன்றதொரு இயற்கை நெறியுடன் ஒன்றித்து வாழ்ந்த
பொற்காலச் சமுதாயம் அல்ல. அதன்கண்ணும் பல்வேறுபட்ட வர்க்க வேறுபாடுகள்,
முரண்பாடுகள், அகநிலைச் சிக்கல்கள்,பாரபட்சங்கள் நிலவியதனைச் சங்க இலக்கியங்களே சுட்டி
நிற்கின்றன. சங்க இலக்கியங்களில் பல்வேறுபட்ட உரிமை மீறல்களும், குற்றங்களும், அதற்கான
தண்டனைகளும் வழங்கப்பட்டதனை அவதானிக்க முடிகிறது. அக் காலத்தில் குற்றமாகக்
கருதப்பட்டவற்றை மக்கள் விரும்பாமையையும், அதனை இகழ்வதனையும் அவதானிக்க
முடிவதுடன், தமக்கெதிராக அநீதி நடந்தேறியுள்ளதெனக் குரலெழுப்புவதனையும் அவதானிக்க
முடிகிறது. இந் நிலையில், சங்க இலக்கியங்களில் குற்றங்களும், தண்டனைகளும் எவ்வாறு
பதிவு செய்யப்பட்டிருக்கின்றதென்பதை ஆராயும் வகையில் இவ்வாய்வு அமைகிறது. விளக்க
முறைத் திறனாய்வு மற்றும் விபரண அணுகுமுறை மூலம் இவ்வாய்வு தெளிவுபடுத்தப்படுகின்றது.
இவ்வாய்வின் மூலம் சங்க இலக்கியங்களில் சுட்டப்பட்ட குற்றங்கள், தண்டனைகள் குறித்த
தெளிவான விளக்கம் முன் வைக்கப்படுகின்றது.