Abstract:
“ விசேட தேவையுடைய பிள்ளைகளின் கற்றலில் பெற்றோரின் பங்களிப்பு ” எவ்வாறு
இருக்கின்றது என்பதை இணங்காணுவதற்காகவே மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரிவிற்குட்பட்ட
விசேட கல்வி நிறுவனங்களை அடிப்படையாகக்கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. விசேட தேவையுடைய
பிள்ளைகளிற்கு கல்வியினை வழங்க நிறுவனங்கள் தயாராக உள்ள போதும் பெற்றோர்கள் இதற்கு தயாராக
இல்லை. விசேட தேவையுடைய பிள்ளைகள் தங்களுடைய தாழ்வு மனப்பான்மை காரணமாக ஒதுங்கியிருக்கின்ற
நிலை காணப்படுகின்றது. அத்தோடு விசேட தேவையுடைய பிள்ளைகளை சமூகத்தினர் இழிவாகப் பார்க்கின்ற
நிலையினை மாற்றி அமைக்க வேண்டும் எனின் விசேட தேவையுடைய பிள்ளைகளின் கற்றலில் பெற்றோர்
பங்களிப்பு அவசியமாகும்.
ஆய்வினை மேற்கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேசம் தெரிவு செய்யப்பட்டது.
இப்பிரதேசத்தில் இருக்கின்ற விசேட கல்வி நிறுவனங்களில் இருந்து வசதி மாதிரிக்கு ஏற்ப தரிசனம், வாழ்வோசை,
புகலிடம், ஓசானம் போன்றவை தெரிவு செய்யப்பட்டது. நான்கு நிறுவனத்தின் கல்வி கற்கின்ற பிள்ளைகளின்
பெற்றோர்களில் இருந்து இலகு எழுமாற்று மாதிரிமூலம் 34 பெற்றோர்களும், ஆசிரியர் தொகை குறைவாக
உள்ளதால் 30 ஆசிரியர்களும், 4 பொறுப்பாளர்களும், அனைத்துப் பிள்ளைகளும் மாதிரியாக தெரிவு செய்யப்பட்டு
ஆய்விற்கான தகவல் பெறப்பட்டது. ஆய்வு மாதிரியில் தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பொறுப்பாளர்கள்,
ஆசிரியர், பெற்றோர், பிள்ளைகள் ஆய்வுக் குடித்தொகையாக மேற்கொள்ளப்பட்டு வினாக்கொத்து, அவதானம்,
நேர்முகங்காணல் போன்ற ஆய்வுக்கருவிகள் பயன்படுத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெறப்பட்ட
தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பகுப்பாய்வு செய்யப்பட்டு தரவுகள் Micro Soft Excel-2007 மூலம்
குறித்துக்காட்டப்பட்டுள்ளது.
விசேட தேவையுடைய பிள்ளைகளின் கற்றல் எவ்வாறு காணப்படுகின்றது? விசேட தேவையுடைய பிள்ளைகளின்
கற்றலில் பெற்றோரின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்கின்றது? விசேட தேவையுடைய பிள்ளைகளின் கற்றலில்
பெற்றோர் பங்களிப்பு செய்யாமைக்குரிய காரணங்கள் கண்டறியப்பட்டு விதந்துரைப்புக்களும் முடிவுகளும்
முன்வைக்கப்பட்டுள்ளது. பெற்றோரிடையே விசேட கல்வி பற்றிய தெளிவின்மையும், அசமந்தப்போக்கும்
விழிப்புணர்வின்மையும், பெற்றோரின் இரத்த உறவுத் திருமணமும், பெற்றோரிடயே பொருளாதாரப்பற்றாக்குறை,
பெற்றோரின் தவறான பழக்க வழக்கங்கள், பல்வேறு செயற்பாடுகள், விசேட கல்வி நிறுவனத்திற்கும் சமூகத்திற்கும்
இடையில் தொடர்பின்மை போன்றவை விசேட தேவையுடைய பிள்ளைகளின் கற்றலில் பெற்றோர் பங்களிப்பு
செய்யாமைக்குரிய காரணங்களாக அடையாளப்படுத்தப்பட்டது. இதற்கு தீர்வினை வழங்குவதன் ஊடாக விசேட
தேவையுடைய பிள்ளைகளின் கற்றலினை ஊக்குவிப்பதுடன் நாட்டின் பொருளாதாரம் அதிகரித்து நாடு
அபிவிருத்திப் பாதை நோக்கி கொண்டு செல்லப்படும் என்பதில் ஜயமில்லை.