Abstract:
சதுரங்க விளையாட்டின் தோற்றம் தொடர்பாக அறிஞர்களிடம் பல்வேறு கருத்து
வேறுபாடுகள் நிலவுகின்றன. சிலர் இதனை ஆசியாவில் தோன்றிய விளையாட்டாகக் குறிப்பிடுகின்றனர்.
வேறு சிலர் இது ஐரோப்பாவில் தோன்றிய விளையாட்டாகக் குறிப்பிடுகின்றனர். ஆனால்
சரவதேசரீதியில் தற்போது விளையாடப்படுகின்ற சதுரங்க விளையாட்டானது இங்கிலாந்து
நாட்டவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். ஆரம்பத்திலேயே பல்வேறுவகையான விதிமுறைகளைக்
கொண்டு காணப்பட்ட சதுரங்க விளையாட்டை பதினைந்தாம் நூற்றாண்டில் சீர்திருத்தி இங்கிலாந்து
நாட்டவர்கள் உலகுக்கு அறிமுகப்படுத்தினர்.1 பதினாறாம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டவர்கள் இதன்
விதிமுறைகளை சிறிது மாற்றம் செய்தனர். தற்போது சர்வதேசரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள
இப்போட்டியின் விதிகளை, உலக சதுரங்க அமைப்பு வகுத்தது. சதுரங்க விளையாட்டானது
அறிவுபூர்வமான ஒரு விளையாட்டாகக் கருதப்படுகிறது. இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரை பல
நாட்டு மக்களும் சதுரங்க விளையாட்டை விரும்பி விளையாடுகின்றனர். இது மூளையை வளர்ச்சி
அடையச் செய்யும் ஒரு விளையாட்டாகக் கருதப்படுவதே அதற்கான காரணமாகும். குறிப்பாக
சதுரங்க விளையாட்டானது கூடுதலாக மூளையை உழைக்கச் செய்து விளையாடும் விளையாட்டாக
உள்ளது. சர்வதேசரீதியில் சதுரங்க விளையாட்டை ஊக்கப்படுத்துவதற்கான பல
முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த சதுரங்க விளையாட்டுக்கும் புராணக்கதையான
மகாபாரதத்துக்கும் இடையில நிறைய ஒற்றுமைகள் உள்ளதை அவதானிக்கலாம். இந்தியாவிலே
தோன்றிய மிகப் பெரும் இலக்கியங்களாக மகாபாரதமும் இராமாயணமும் உள்ளது. இவற்றின் மூலம்
சமஸ்கிருத மொழியில் காணப்படுகிறது. அதில் மகாபாரத இலக்கியமானது பாண்டுவின் புத்திரர்களான
யுதிஷ்டன், அர்ச்சுணன், வீமன், நகுலன், சகாதேவன் ஆகியோர் திருதராஷ்டினனின் புத்திரர்களான
துரியோதனன், துச்சாதனன், விகர்ணன் உள்ளிட்ட நூறுபேருடன் மேற்கொண்ட தர்ம யுத்தம்
தொடர்பாகச் சொல்லுகிறது. பாண்டு மன்னனின் புத்திரர்கள் பாண்டவர்கள் என்றும் திருதராஷ்டினனின்
புத்திரர்கள் கௌரவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். பாரத நாட்டில் இருந்த அனைத்து மன்னர்களும்
இந்த இரு அணிகளுக்கும் உதவியாக போர்க்களத்தில கலந்து கொண்டனர். எனவே இந்த யுத்தம்
மகாபாரத யுத்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த யுத்தத்தில் அசுரர்களும் கலந்து கொண்டார்கள்.
இந்த யுத்தம் பாரத தேசத்தில் பெரும் அழிவை உருவாக்கியதாக கூறப்படுகின்றது. சகுனியும்
பாண்டவர்களில் மூத்தவனான யுதிஷ்டனும் சூது விளையாடும் போது சூதாட்டத்துக்கான பொருளாக
வைக்கப்பட்ட பாண்டவர்களின் மனைவி பாஞ்சலி கௌரவர்களுக்கு உரிமையாகி அவளது துயில்
உறியப்பட்டதே யுத்தத்துக்கு பிரதான காரணமாகியது. மகாபாரதக் கதை மகாபாரத யுத்தம்
தொடர்பாகப் பிரதானமாகக் கூறுவதுடன் இன்னும் பல கிளைக் கதைகளைக் கொண்டுள்ளது. பராசர
மகரிஷியின் புத்திரரான வியாச முனிவர் மகாபாரதத்தை தொகுத்துப் பாட விநாயகர் அதனை நூல்
வடிவில் எழுதியதாக நம்பப்படுகிறது.2 தமிழ்மொழியில் மகாபாரதத்தை முதல் முதல் எழுதியவர்
பரதம்பாடிய பெருந்தேவனார் ஆவார். இது செய்யுள் நடையில் பாடப்பட்டுள்ளது. இன்று மகாபாரதக்
கதை தொடர்பான பல உரைநடை நூல்கள் தமிழ் மொழியில் உள்ளன. மகாபாரதக் கதையில் வரும்
சம்பவங்கள், அதன் பாத்திரங்கள், கதை முன் நகர்த்தப்படும் முறைகள் ஆகியவற்றுக்கும் சதுரங்க
விளையாட்டுக்கும் இடையில் அதிகமான ஒற்றுமைகள் காணப்படுவதை அவதானிக்க முடியுமாக
உள்ளது. அவ்வாறான ஒற்றுமைகளை ஆராய்வதாகவே இவ்வாய்வு அமைந்துள்ளது.